மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்: பாலகிருஷ்ணன் பேட்டி
மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கரூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
பேட்டி
கரூரில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க. ஆபத்தை நோக்கி செல்கின்ற ஆட்சியாக இருக்கிறது.
அதானியின் சொத்து குவிப்புக்கும், இந்த ஆட்சியின் ஊழல் முறைகேடுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதற்காகதான் நாடாளுமன்ற விசாரணை குழு அமைப்பதற்கு கூட தயங்குகிறது. இதன்விளைவாக ராகுல்காந்தி பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டினை உடனடியாக காலி செய்ய நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
3 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு
கரூரில் டெக்ஸ்டைல் தொழில் முடங்கி போய் உள்ளது. குறைந்த அளவிலான ஆர்டர்கள்தான் கிடைத்துள்ளது. ஆகையால் மேற்கு மாவட்டத்தில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் தொழில் முடங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
தமிழக பட்ஜெட்டில் பாராட்ட கூடிய பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதே நாங்கள் வரவேற்கிறோம். நிதியமைச்சர் பேசும் பலவிதமான கருத்துகள் புதிய தாராளமய கொள்கையின் அடிப்படையில் தான் அவரது அணுகுமுறையும், சிந்தனையும் இருக்கிறது. இதுபோன்ற பொருளாதார கொள்கைகளை தமிழ்நாட்டில் அமல்படுத்தினால், அது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்தராது.
தமிழர்களுக்கு முன்னுரிைம
அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட தொகுப்பூதியம், மதிப்பூதிய திட்டத்தை அரசு ஏன் நீட்டிக்க வேண்டும். இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நியாயமான முறையில் அரசு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
வடமாநில தொழிலாளர்களால் தமிழக இளைஞர்களுக்கு வேலை பாதிக்கப்படுகிறது என சொல்ல முடியாது. ஆனால் தமிழகத்தில் மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிைம கொடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர் கூறினார்.