தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி மற்றும் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!
பிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை,
பிரிட்டனில் நடைபெற்ற பிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிச் சுற்றில் மங்கோலிய வீராங்கனை பத்குயாக் முங்குந்துலுடன் வைஷாலி மோதினார். இந்த போட்டி டிராவில் முடிவுற்றது. எனினும் இத்தொடரில் அதிக புள்ளிகள் பெற்றவர் என்ற முறையில் சாம்பியன் பட்டத்தை வைஷாலி கைப்பற்றினார்.
இந்த வெற்றி மூலம் அடுத்தாண்டு கனடாவில் நடைபெற உள்ள மகளிருக்கான செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாடவும் வைஷாலி தேர்வாகி உள்ளார். ஏற்கெனவே ஆண்கள் பிரிவில் உலகக்கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் அவரது சகோதரர் பிரக்ஞானந்தா கேண்டிடேட் தொடருக்கு தேர்வாகி உள்ளார்.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் பிரக்ஞானந்தாவுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில்,
'வாழ்த்துக்கள் வைஷாலி. இங்கிலாந்தில் நடைபெற்ற பிட் மகளிர் கிராண்ட் ஸ்விஸ் 2023 இல் அவரது வெற்றியில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது. 2024 இல் நடைபெறவுள்ள செஸ் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்ற முதல் சகோதர-சகோதரி ஜோடியாக வரலாறு படைத்த வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இடம் பெறுவதற்காக கனடாவில் நடைபெற உள்ள கேண்டிடேட் தொடரில் உடன்பிறப்புகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்' என பதிவிட்டுள்ளார்.