பெண்கள் முன்னேறினால்தான் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் முன்னேறும்
பெண்கள் முன்னேறினால்தான் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் முன்னேறும் என்று கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
பெண்கள் முன்னேறினால்தான் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் முன்னேறும் என்று கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
மகளிர் உரிமை தொகை திட்டம்
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் கையேடுகள் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு அருகில் குமரன் மகாலில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் டி.மதியழகன் எம்.எல்.ஏ., ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, 500 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் கையேடுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
செயல்வடிவம்
இந்திய நாடே திரும்பி பார்க்கிற திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் பாராட்டுகிறது.
இந்தத் திட்டத்தை பின்பற்றி, கர்நாடகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண்ணுரிமை குறித்து தந்தை பெரியார் கண்ட கனவுகளுக்கு எல்லாம் நம்முடைய தி.மு.க. அரசு செயல்வடிவம் கொடுத்து வருகிறது. எனவே தான் இந்த அரசை நாம் திராவிட மாடல் அரசு என்று குறிப்பிடுகிறோம்.
முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகள்
பெண்களின் முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டைகள் என்னென்ன என்று பெரியார் ஒரு கருத்தைச் சொன்னார். பெண்களின் முன்னேற்றம் 3 வழிகளில் தடுக்கப்பட்டிருக்கிறது என்று பெரியார் சொன்னார். கலாசார ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தடுக்கப்பட்டுள்ளது. இந்த 3 தடைகளையும் நீக்கினால் போதும் பெண்கள் சுதந்திரமாக வாழ கூடிய நிலை ஏற்படும் என பெரியார் கூறினார்.
பெண்கள் முன்னேற்றத்துக்கு கலாசார ரீதியாக இருந்த தடைகள் என்னென்ன? என பெரியாரே சொன்னார். இதை எல்லாம் எதிர்த்து பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தது நம்முடைய திராவிட இயக்கம்.
புதுமை பெண் திட்டம்
தி.மு.க. அரசு பள்ளியில் இருந்து கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு புதுமை பெண் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்குகிறது. படிப்பதற்காக அல்லது வேலைக்காக பெண்கள் பயணம் செய்வதற்கு வாய்ப்பாக மகளிருக்கான கட்டணமில்லா பஸ் பயண திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை நமது தி.மு.க. அரசு நிறைவேற்றிய மகளிர் முன்னேற்றத் திட்டங்களிலேயே முதன்மையானது என்று சொல்லக் கூடிய திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்.
இந்த திட்டத்திற்கு நம்முடைய முதல்-அமைச்சர் வைத்திருக்கும் பெயர் தான் இதிலே முக்கியமானது. இந்த திட்டம் மகளிருக்கான உரிமை என்பதால், இதற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று பெயர் வைத்துள்ளார்கள்.
உள்ளாட்சி பதவிகள்
இது உங்கள் தாய் வீட்டு சீர். பெண்களுடைய உழைப்புக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இப்போது அங்கீகாரம் கொடுத்திருக்கிறார். உங்களுடைய மகனாக, சகோதரனாக இருந்து இதை பார்த்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பெண்கள் கல்வி, பொருளாதாரத்தில் உயர வேண்டும். அதேபோல் பொது வாழ்க்கையிலும் பெண்கள் அதிகமாக ஈடுபட வேண்டும். அப்போது தான் உங்களுக்கான உரிமைகளை நீங்கள் வலியுறுத்தி பெற முடியும். இப்போது, உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீதம் பெண்கள் வந்திருக்கிறார்கள்.
தூண்டுகோலாக அமையும்
மகளிர் நிறைய படிக்க வேண்டும், முற்போக்காக சிந்திக்க வேண்டும். பெண்கள் முன்னேறினால்தான் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் முன்னேற முடியும். பொருளாதாரத்தில் பெண்கள் வளர்வது நமது வீட்டிற்கும், சமுதாயத்திற்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் மிகப்பெரிய பலனைத் தரும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஒவ்வொரு வீட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிய தூண்டுகோலாக அமையப் போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.