ஒடிசா ரெயில் விபத்தில் தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக குழு தகவல்


ஒடிசா ரெயில் விபத்தில் தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக குழு தகவல்
x

ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை தமிழகத்தை சேர்ந்தவர் யாரும் உயிரிழந்ததாக தெரியவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக குழுவினர் தகவல் கூறியுள்ளனர்.

காணொலி காட்சி

ஒடிசா மாநிலத்தில் 3 ரெயில்கள் மோதிக்கொண்டதில் 280-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியாகினர். 750-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் தமிழர்கள் யாரும் சிக்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிந்து அவர்களை மீட்பதற்காக, தமிழக அரசின் அமைச்சர்கள், அதிகாரிகளைக் கொண்ட குழு ஒரிசாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி நேற்று மாலை, ஒடிசா சென்ற தமிழ்நாட்டு குழுவினருடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ஒடிசா ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளோர் குறித்தும், மீட்புப் பணிகளின் நிலவரங்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

விவரங்களை சேகரிப்பு

ஒடிசா ரெயில் விபத்தில் காயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்யவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளைச் செய்யவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உடனடியாக ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அமைச்சர்கள் மற்றும் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் விபத்து நடந்த பாலசோர் என்ற இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகளை கண்காணித்து உதவி வருகின்றனர்.

தமிழகத்தினர் இல்லை

இந்நிலையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், பாலசோர் அரசு மருத்துவமனைக்கு சென்று, விபத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்த்து வந்ததாகவும், ஆனால் அந்த மருத்துவமனையில் தமிழ்நாட்டைச் நேர்ந்த எவரும் இதுவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும் கட்டாக்கில் உள்ள எஸ்.வி.பி. மருத்துவமனையில், விபத்தில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களின் விவரங்களை அவர்கள் சேகரித்து வருவதாகவும், தற்போது வரை அந்த மருத்துவமனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை என தெரிய வந்துள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

பாலசோர் நகரத்தில் உள்ள 4 இடங்களில், விபத்தில் இறந்த 237 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தற்போதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 70 சடலங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை என்று அங்குள்ள மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் குழுவினர் தெரிவித்தனர்.

தங்கி இருங்கள்

தென்னக ரெயில்வேயின் பயணிகளின் முன்பதிவு பட்டியலின்படி, விபத்தில் சிக்கிய ரெயில்களில் பயணம் செய்தவர்களின் விவரங்கள், அவர்களது உறவினர்களிடம் சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் அமைச்சர்கள் தலைமையில் ஒடிசா சென்றுள்ள குழுவினர், மேலும் சில தினங்கள் அங்கு தங்கியிருந்து, தமிழ்நாட்டைச் நேர்ந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக சென்னை வந்தடைவதை உறுதி செய்திட வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

நவீன் பட்நாயக்குடன் சந்திப்பு

இந்த நிலையில் நேற்று மாலை தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் தமிழக போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளின் பாதுகாப்பு, மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்து கலந்துரையாடினர்.


Next Story