அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் 150 தெருக்களுக்கு தமிழ் பெயர்


அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் 150 தெருக்களுக்கு தமிழ் பெயர்
x

அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி ஊராட்சியில் தெருக்களுக்கு தமிழ் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஊராட்சியின் முயற்சியை அனைவரும் பாராட்டி உள்ளனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி ஊராட்சியில் தெருக்களுக்கு தமிழ் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஊராட்சியின் முயற்சியை அனைவரும் பாராட்டி உள்ளனர்.

ஆத்திப்பட்டி ஊராட்சி

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஆத்திப்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கட்டகஞ்சம்பட்டி, லட்சுமிநகர், நாராயணபுரம், ஜெயராம் நகர், என்.ஜி.ஓ. காலனி ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன. ஆத்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி யோகாவாசுதேவன். இவர் ஆத்திப்பட்டி ஊராட்சியில் விரிவாக்க பகுதியில் தெருவிற்கு பெயர் இல்லாமல் இருந்து வந்ததால் அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் ஆட்டோகாரர், தபால்காரர், ஆன்லைன் டெலிவரிக்கு முகவரியை தெரிவிப்பதில் சிரமம் அடைந்து வந்தனர்.

மேலும் விரிவாக்கப் பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்புகளும் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்தநிலையில் ஆத்திப்பட்டி ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி யோகா வாசுதேவன் விரிவாக்க பகுதியிலுள்ள தெருக்களுக்கு தமிழ் மாதங்கள், காலங்கள், நதிகள், மலர்களின் பெயர்களை சூட்டியுள்ளார்.

தமிழ் மாதம்

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி யோகா வாசுதேவன் கூறும்போது, ஆத்திப்பட்டி விரிவாக்க பகுதிகளில் பல தெருக்கள் பெயரில்லாமல் இருந்தன. இதனால் விரிவாக்க பகுதியில் தமிழ் மாதங்களான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகியவற்றையும், ஆறுகளான மணிமுத்தாறு, குண்டாறு, பம்பா, ஆழியாறு, அமராவதி, மகாநதி என்ற பெயரில் 4 வீதிகளும், மலர்களில் முல்லை, வாடாமல்லி, தாமரை, ரோஜா, அல்லி, சூரியகாந்தி, செந்தாமரை, ஆவாரம்பூ, மகிழம்பூ, தாழம்பூ, அடுக்குமல்லி, தாமரை, சாமந்திப்பூ, பவளமல்லி என 150 தெருக்களுக்கு பெயரை சூட்டியுள்ளோம்.

புதுவித முயற்சி

புதுவிதமான முயற்சி அடிப்படையில் விரிவாக்க பகுதியில் உள்ள தெருக்களுக்கு தமிழ் மாதங்கள், ஆறுகள், மலர்கள் என பெயர் வைத்தோம். ஏற்கெனவே ஆத்திப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளோம். இப்போது தெருக்களுக்கு தமிழில் பெயர் சூட்டியதை பலரும் பாராட்டுகின்றனர்.

ஆத்திப்பட்டி ஊராட்சியில் உள்ள தெருக்களின் பெயர்களை கூகுளில் தேடினால் முகவரியை கண்டுபிடிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். தெருக்களுக்கும் காலங்கள், மாதங்கள், ஆறுகள், மலர்கள் என பொதுவான பெயர் வைக்கப்பட்டுள்ளன. அதிலும் குழப்பம் வராத வகையில் ஒரு பக்கம் முழுவதும் மாதங்களின் பெயர்கள், மற்றொரு பக்கம் காலங்கள், நதிகள், மலர்கள் என்று சுலபமாக கண்டுபிடிக்கும் வகையில் பெயர் வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி ஊராட்சியில் தெருக்களுக்கு தமிழ் பெயர்கள் வைக்கப்பட்டு இருப்பதை பாராட்டி உள்ள சமூக ஆர்வலர்கள் இதுபோல் மற்ற ஊராட்சிகளும் தெருக்களுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்றனர்.


Next Story