தமிழகத்தின் முதல் பா.ஜனதா எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


தமிழகத்தின் முதல் பா.ஜனதா எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 9 May 2024 12:07 PM IST (Updated: 9 May 2024 12:51 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் முதல் பா.ஜனதா எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

சென்னை,

நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடையை அடுத்த கருப்புக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சி.வேலாயுதன் (வயது 73). 1996-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலின்போது வேலாயுதன் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்மூலம் தமிழகத்தில் பா.ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் எம்.எல்.ஏ. என்ற பெருமையை இவர் பெற்றார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் கருப்புக்கோட்டில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தின் முதல் பா.ஜனதா எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதன் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். மாற்றுக் கொள்கைகள் கொண்டவராக இருந்தாலும், கட்சி வேறுபாடுகளின்றி அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர் பழகுதற்கினிய உள்ளம் கொண்டவர் அவர்.

தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர். அவரது இல்ல நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்று வாழ்த்திய நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள். நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.


Next Story