தென்மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் முதலிடம்
தென்மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் முதலிடம் பிடித்துள்ளனர். போட்டி நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா இன்று நடக்கிறது.
தென்மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் முதலிடம் பிடித்துள்ளனர். போட்டி நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா இன்று நடக்கிறது.
துப்பாக்கி சுடும் போட்டி
14-வது தென்மண்டல துப்பாக்கி சுடும் போட்டி (ஷாட்கன்) புதுக்கோட்டை மாவட்டம், ஆவாரங்குடிபட்டியில் உள்ள புதுக்கோட்டை மகாராஜா துப்பாக்கி சுடும் மையத்தில் கடந்த 31-ந் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது.
இதில் நேற்றைய போட்டிகளை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்ததுடன், துப்பாக்கியால் சுடவும் செய்தார். நிகழ்ச்சியில் ராஜா ராஜகோபால தொண்டைமான், முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், சர்வதேச துப்பாக்கி சுடும் வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தங்கப்பதக்கம்
`டபுள் டிராப்' எம்.கியூ.எஸ் பிரிவில் தமிழக வீரர் எழில் தங்கப்பதக்கத்தை வென்றார். இதில் தமிழக வீரர் தினேஷ் சேகரன் 2-வது இடத்தை பிடித்தார். ஆண்கள் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் கார்த்திக்கும், ஜூனியர் ஆண்கள் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் ஆரோன்பென்கரும், மாஸ்டர் ஆண்கள் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் காமராஜும் முதலிடத்தை பிடித்தனர். பெண்கள் தனிநபர் பிரிவில் தமிழக வீராங்கனை சரண்யாதேவி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஜூனியர் பெண்கள் தனிநபர் பிரிவில் விஜயலட்சுமியும் (தமிழ்நாடு), சூப்பர் மாஸ்டர் ஆண்கள் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவில் ஜெயசந்திரன் தங்கநாடாரும் (தமிழ்நாடு) மாஸ்டர் ஆண்கள் போட்டியில் (தனிநபர் மற்றும் அணிகள் பிரிவு) தமிழகத்தை சேர்ந்த கந்தவேல் பரதனும், ஜூனியர் ஆண்கள் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சூர்யாராஜா பாலுவும் முதலிடத்தை பிடித்தனர்.
ஆண்கள் தனிநபர்
`ஸ்கீட்' பிரிவில் ஆண்கள் தனிநபர் போட்டியில் தெலுங்கானா வீரர் அனிருத் முதலிடத்தை தட்டிச் சென்றார். ஆண்கள் தனிநபர் மற்றும் அணிகள் போட்டியில் தெலுங்கானா வீரர் முனேக்பத்துலாவும், ஜூனியர் ஆண்கள் தனிநபர் மற்றும் அணிகள் போட்டியில் முனேக்பத்துலாவும் (தெலுங்கானா), மாஸ்டர் ஆண்கள் தனிநபர் மற்றும் அணிகள் போட்டியில் சேத்தன்ரெட்டியும் (தெலுங்கானா) தங்கம் வென்றனர். சீனியர் மாஸ்டர் ஆண்கள் தனிநபர் போட்டியில் தமிழக வீரர் ராஜா ராஜகோபால தொண்டைமான் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்தார். எம்.கியூ.எஸ் போட்டியில் தெலுங்கானா வீரர் சையதுஅலிமுர்துசா தங்கம் வென்றார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) 6-வது மற்றும் கடைசி நாள் போட்டிகள் நடக்கின்றன. அதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்கிறது.