தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடு ஆமை வேகத்தில் இருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடு ஆமை வேகத்தில் இருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
x

காலிப் பணியிடங்கள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் நிரப்ப முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

வேலையில்லாத் திண்டாட்டம் என்பது உலகளாவிய பிரச்சினை என்றாலும், இந்தப் பிரச்சினை கடந்த இரண்டரை ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது. இந்தப் பிரச்சினையை போக்க கடுகளவு நடவடிக்கையைக்கூட 'திராவிட மாடல்' தி.மு.க. அரசு எடுக்கவில்லை என்பதே இளைஞர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் உயர்ந்து கொண்டு வருவதாக மத்திய அரசை குற்றம் சாட்டும் தி.மு.க. அரசு, முதலில் 'திராவிட மாடல்' அரசால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அரசுப் பணியிடங்களை நிரப்பும் அதிகாரம் பெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று ஆளில்லா தேர்வாணையமாக இருக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. தலைவர் உள்பட மொத்தம் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இன்று வெறும் 4 பேர் மட்டுமே இருக்கின்றார்கள். மீதி பத்து இடங்கள் காலியாக உள்ளன. இதில் தலைவர் பொறுப்பை வகிக்க கூடியவர் வெகு விரைவில் ஓய்வு பெற இருக்கிறார். இது மட்டுமல்லாமல், பணியாளர் பற்றாக்குறையும் தலைவிரித்து ஆடுகிறது.

இதன் காரணமாக, 2021 ஆம் ஆண்டு தேர்வு நடைபெற்ற குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. இதேபோன்று குரூப் 2 பிரதான போட்டித் தேர்வுக்கான முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அக்டோபர் மாதமே வெளியிடப்பட வேண்டிய இந்த ஆண்டிற்கான குரூப் 4 அறிவிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை. தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த வேலையினை ராஜினாமா செய்துவிட்டு, ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து மாதக் கணக்கில் போட்டித் தேர்விற்கான பயிற்சியை இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்ற நிலையில், அறிவிக்கை வெளியிடுவது, தேர்வு நடத்துவது, முடிவுகளை வெளியிடுவது என அனைத்தையும் தி.மு.க. அரசு தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடு ஆமை வேகத்தில் இருக்கிறது.

காலியாக உள்ள லட்சக்கணக்கான அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற தி.மு.க.வின் வாக்குறுதியை நம்பிய இளைஞர்கள் தற்போது ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தில் ஏதாவது பிரச்சினை இருக்குமேயானால், அதுகுறித்து கவர்னரிடம் அரசு கலந்து பேசி அதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்பதும், காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் உடனடியாக நிரப்ப வேண்டுமென்பதும் இளைஞர்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இளைஞர்களின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு, கவுரவம் பார்க்காமல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது குறித்து மேதகு கவர்னருடன் கலந்து பேசி முடிவெடுக்கவும், காலிப் பணியிடங்கள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பவும், முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story