தமிழ்நாட்டில் காவல்துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன -டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்


தமிழ்நாட்டில் காவல்துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன -டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்
x

தமிழ்நாட்டில் காவல்துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்தார்.

ஊட்டி,

பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் சரிபார்ப்பு செயல்பாட்டில், போலீஸ் துணை சூப்பிரண்டுகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வந்தார். வரும் வழியில் குன்னூர், வெலிங்டன், ஊட்டி மத்திய போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்தார்.

போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆவணங்களை ஆய்வு செய்தார். மேலும் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2,600 சான்றிதழ்கள் சரிபார்ப்பு

ஊட்டியில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையம் சார்பில் காவல்துறை சமூக நிதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவலர்களுக்கு, பழங்குடியினர் சான்று மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்களை கையாளுவது குறித்து 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 1.2 சதவீதம் பழங்குடியினர் உள்ளனர். கடந்த ஆண்டு இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக 75 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு பழங்குடியினர் சான்று கேட்டு விண்ணப்பித்தவர்களில், 2,600 பேருக்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் உயர் கல்வி போட்டி தேர்வுகளில் அவர்கள் பணிகளில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2,300 வரவேற்பு அதிகாரிகள்

போலீசார் மற்றும் பொதுமக்களுடன் நல்லுறவு பேணும் வகையில் போலீஸ் நிலையங்களில் 2,300 வரவேற்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். காவல் துறையில் முழு பணியிடங்கள் நிரப்பப்பட்டால் தான் சிறப்பாக பணியாற்ற முடியும். தற்போது தமிழ்நாடு காவல்துறையில் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டு, முழு திறன் கொண்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்தாண்டு 10 ஆயிரம் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், 3,500 காவலர்கள் தேர்வாகி பயிற்சியில் சேர்ந்துள்ளனர். 2,500 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

உதவி ஆய்வாளர்கள் 1,000 பேர் பயிற்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர். 444 உதவி ஆய்வாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 600 உதவி ஆய்வாளர்கள் காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்கவுள்ளது. இனி 6 மாதங்களுக்கு பிறகுதான் மீண்டும் ஆட்கள் தேர்வு நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆய்வு பணியில் இருந்தபோது போலீஸ் குடியிருப்பில் இருந்த போலீசாரின் குழந்தைகள் ஓடி வந்து அவரிடம் ஆர்வமுடன் பேசி, செல்பி எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு செல்பி எடுத்துக்கொண்டார்.


Next Story