தமிழக மக்கள் பிரச்சினை: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் குரல் எழுப்ப திமுக தீர்மானம் நிறைவேற்றம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.
சென்னை,
ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழக மக்கள் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் குரல் எழுப்ப திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை கேள்விகளாக எழுப்ப திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்ட மசோதாக்களுக்கு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர்களின் அத்துமீறல், சமூக நீதி, அடிப்படை உரிமை, மாநில உரிமைகளுக்கு பேராபத்தை பாஜக ஏற்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
➤ மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும்
➤ தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநருக்கு எதிராக தீர்மானம்
➤ எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்துவது
➤ தமிழை புறக்கணித்து சமஸ்கிருதம், இந்தியை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு
➤ பொது விநியோக திட்டத்தின் கீழ் கோதுமை, பருப்பு போன்ற பொருட்களுக்கு மானியம் குறைப்பு உள்ளிட்டவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.