சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் பலி
சத்தீஷ்கரில் நடைபெற்ற நக்சலைட்டுகள் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் பலியானார்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி ஊராட்சி கே.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்கப்பன். இவரது மகன் கோகுல் மும்பையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். மற்றொரு மகன் தேவன் (வயது 30) சத்தீஷ்கார் மாநிலத்தில் துணை ராணுவத்தில் (சி.ஆர்.பி.எப்.) பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு காயத்திரி என்ற மனைவியும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். தேவன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சக வீரர்களுடன் முகாம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது நேற்று முன்தினம் மதியம் திடீரென சுற்றி வளைத்த நக்சலைட்டுகள் துணை ராணுவப்படை வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டு, வெடிகுண்டுகளை வீசி உள்ளனர்.
இதில் அசாமை சேர்ந்த ஒருவர், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி கே.மோட்டூரை சேர்ந்த தேவனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து நேற்று முன்தினம் நள்ளிரவு தேவனின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
நக்சலைட்டுகள் தாக்குதலில் மரணம் அடைந்த தேவனின் உடல் இன்று (வியாழக்கிழமை) சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.