தமிழகம் போதை பொருள் விற்பனையில் தலைநிமிர்ந்து இருக்கிறது - ஜி.கே.வாசன்
தமிழகம் போதை பொருள் விற்பனையில் தலைநிமிர்ந்த மாநிலமாக இருக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இன்று கோவில்பட்டி வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
தென்மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் கோவில்களுக்கு வந்து செல்லும் பக்தர்கள் வசதிக்காக ரெயில் போக்குவரத்தை நீட்டிக்க வேண்டும்.
இந்துக்கள் பற்றி ஆ.ராசா பேசியது ஏற்புடையது அல்ல என்பதில் மாற்று கருத்து கிடையாது. மின் கட்டண உயர்வு என்பது கொரோனா காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை விட மின் கட்டண உயர்வு அதிர்ச்சி அதிகம்.
தமிழகத்தில் தி.மு.க. வாக்குறுதிகள் மூலம் வென்ற அரசு. ஆட்சிக்கு வந்தபிறகு வாக்குறுதிகளை நிறை வேற்ற தவறிய அரசாக இருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று காத்திருந்த மக்களை தொடர்ந்து ஏமாற்றும் அரசுதான் நடக்கிறது.
ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை கட்சிக்கு பயன் அளிக்குமே தவிர, நாட்டுக்கு எந்த பயனும் அளிக்காது. தனியார் பஸ்கள் லாபத்தை பார்க்கவேண்டுமே தவிர அதிக லாபத்தை பார்க்ககூடாது. மக்கள் வாங்கும் போனஸ் தொகையை ரெயிலுக்கும், பஸ்சுக்கும் கொடுத்து விட்டால் மற்ற செலவுக்கு என்ன செய்வார்கள்.
தமிழகம் இன்றைக்கு போதை பொருள் விற்பனையில் தலைநிமிர்ந்த மாநிலமாக இருக்கிறது என்பது வேதனையான வெட்கப்பட வேண்டிய ஒன்று. பள்ளி, கல்லூரிகள் முன்பு போதை பொருள் நடமாட்டம் இருக்கிறது,
போதை பொருள் நடமாட்டம் என்பது அரசின் இயலாமையை காட்டுகிறது. போதைபொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டியது அரசின் கடமை. மிகப்பெரிய சூதாட்டமாக இருக்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யவேண்டும். ஆன்லைன் ரம்மியால் யாருக்கு லாபம், இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கும் போது சந்தேகப்படும் அளவுக்கு தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.