தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் இன்று தொடங்குகிறது
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது. சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்சன் சமீபத்தில் பலியானான். இதேபோல் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநிதி என்ற சிறுமியும் டெங்கு பாதிப்புக்கு உயிரிழந்தார்.
பாதிப்பு அதிகரிப்பு
நாள் தோறும் சராசரியாக 30 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனையடுத்து டெங்கு பாதிப்பை தடுக்க தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக தமிழ்நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தடுப்பு நடவடிக்கை
தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல 2 ஆயிரத்து 972 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்து தினசரி காய்ச்சல் உடையவர்கள் அடையாளம் காணப்பட்டு, பட்டியல் தயார் செய்யப்பட்டு நோய் தடுப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கொசுப்புழு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 23 ஆயிரத்து 717 தற்காலிக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆவதால் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட அளவில் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
4,500 பேருக்கு டெங்கு
அரசு ஆஸ்பத்திரிகளில் உயிர் காக்கும் மருந்துகள், ரத்த அணுக்கள் பரிசோதனை கருவிகள், ரத்தம் போதிய அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் டெங்குவுக்கு என தனி வார்டு இயங்கி வருகிறது. தேவைக்கேற்ப கூடுதலாக விரிவுபடுத்தப்படும். இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 42 ஆயிரத்து 743 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதில் 4 ஆயிரத்து 524 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகளின் பகுதிகளை சிறுவட்டங்களாக பிரித்து, ஒவ்வொரு வட்டத்திற்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருக்களில் வாரந்தோறும் கொசு புழு அழிப்பு பணிகள் நடந்து வருகின்றது. கொசு ஒழிப்பு பணிக்காக 4 ஆயிரத்து 231 மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆயிரம் காய்ச்சல் முகாம்
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் அரசு சார்பிலும், மருத்துவத்துறை சார்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் 363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சென்னையில் மட்டும் 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஆயிரம் காய்ச்சல் சிகிச்சை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் காய்ச்சல் முகாம்களை சிறப்பாக நடத்த வேண்டும்.
மழை முடியும் வரை...
சென்னையில் காலை 9 மணிக்கு மயிலாப்பூர் சீனிவாசபுரம் பகுதியில் நடைபெறும் முகாமை தொடங்கி வைக்க உள்ளேன். ஒரு நாளோடு நிறுத்தாமல் இதுபோன்ற காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும். அதாவது, வடகிழக்கு பருவமழை எப்போது முடிகிறதோ அதுவரை இந்த முகாம்கள் நடத்தப்படும்.
இதற்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகள், மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து பகுதிகளிலும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. போதுமான மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். டெங்கு குறித்து பெரிய அளவில் பதற்றப்பட வேண்டாம். டெங்கு பாதிப்புக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2012-ல்தான் அதிகபட்ச உயிரிழப்பாக 66 பேர் இறந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மருத்துவத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.