தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்
பரபரப்பான சூழ்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
சென்னை,
தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார். அவர் பதிவு செய்யும் கருத்துகளுக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருக்கின்றன.
மேலும் கவர்னரை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்பட கூட்டணி கட்சிகள் அனைத்தும் கூட்டாக அறிக்கையும் வெளியிட்டு இருந்தன.
ஜனாதிபதியிடம் மனு
அதன் தொடர்ச்சியாக, கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி, தி.மு.க. ஜனாதிபதியிடம் முறையிட திட்டமிட்டு இருக்கிறது. இதுதொடர்பான மனுவில் தி.மு.க. மற்றும் அதனுடன் ஒருமித்த கருத்துகள் கொண்ட அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் கையெழுத்திட வேண்டும் என்று தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதன்படி, அந்த மனுவில் எம்.பி.க்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.
டெல்லி பயணம்
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்ற அவர், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் முக்கிய மத்திய மந்திரிகளை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது.
ஆனால் அவர் டெல்லி ஜன்பத்தில் உள்ள தனியார் ஓட்டலில் 'வேலி ஆப் வேர்ட்ஸ்2022' மற்றும் 'யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூசன் ஆப் இந்தியா' சார்பில் இன்று காலை நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்பதற்காகவே சென்றிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த கருத்தரங்கை அவர் முடித்துவிட்டு, இன்றே (வெள்ளிக்கிழமை) அவர் சென்னை திரும்ப இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.