நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது; சட்டசபையில் முதல்-அமைச்சர் உறுதி


நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது; சட்டசபையில் முதல்-அமைச்சர் உறுதி
x

காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டேன் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று நேரமில்லா நேரத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் அமைப்பதாக வெளியாகும் தகவல் தொடர்பாக உறுப்பினர்கள் டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க.), ஆர்.காமராஜ் (அ.தி.மு.க.), செல்வபெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்டு), வைத்திலிங்கம் (ஓ.பன்னீர்செல்வம் அணி), சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.), வானதி சீனிவாசன் (பா.ஜ.க.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), பூவை ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் அரசின் கவனத்தை ஈர்த்து பேசினர்.

இதில் பேசிய அனைத்து உறுப்பினர்களும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க கூடாது என்றும், தமிழக அரசின் அனுமதியை பெறாமல் தன்னிச்சையாக மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும், மத்திய அரசுக்கு அழுத்தம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன் (கோவை தெற்கு) பேசும்போது, சில விஷயங்கள் குறித்து பேசினார். அது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், 'விவசாயம் நமக்கு முக்கியம். இந்த விஷயத்தில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்று மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

பிரதமருக்கு கடிதம்

உறுப்பினர்கள் அனைவரும் பேசிய பிறகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். கடிதம் எழுதியதுடன் நின்று விடாமல் தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். அந்த கடிதத்தின் நகலை டி.ஆர்.பாலு எம்.பி. மூலம் மத்திய நிலக்கரி துறை மந்திரிக்கு வழங்க சொல்லியுள்ளார்.

ஆனால், மத்திய மந்திரி ஊரில் இல்லை என்பதால் அவரிடம் டி.ஆர்.பாலு தொலைபேசியில் பேசியிருக்கிறார். நிலக்கரி சுரங்கம் அமைப்பதை கைவிட வலியுறுத்தி இருக்கிறார். நாடாளுமன்றத்திலும் தி.மு.க. எம்.பி.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறார்கள். மேலும், தமிழக அரசு ஒருபோதும் இந்த திட்டத்தை அனுமதிக்காது என்றும் முதல்-அமைச்சர் கூறியிருக்கிறார்.

அனுமதிக்க மாட்டோம்

வேளாண் பாதுகாப்பு சட்ட பிரிவின்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி தடை செய்யப்பட்ட திட்டங்களில் நிலக்கரி, மீத்தேன், ஷெல் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. எனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டப்படி இந்த திட்டத்தை மேற்கொள்ள முடியாது.

கடந்த ஆட்சி காலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டபோது அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் நீங்கள் (அ.தி.மு.க.) எதையெல்லாம் விட்டுவிட்டு எப்படி கொண்டு வந்தீர்கள் என்பது தெரியும். அதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. எங்களை பொறுத்தவரையில் எந்த சூழ்நிலையிலும் நிலக்கரி சுரங்கம் அமைவதை அனுமதிக்க மாட்டோம். இதில் அரசு உறுதியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மதிப்பு அளிப்போம், கவலைப்பட வேண்டாம்

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நீங்களெல்லாம் இந்த செய்தியை கேட்டு எப்படி அதிர்ச்சிக்கு ஆளானீர்களோ, நானும் அதே உணர்வோடுதான் அதிர்ச்சிக்கு ஆளானேன். இதுகுறித்த செய்தியை பார்த்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நான் தொடர்பு கொண்டு பேசி, அதற்கு பிறகு உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.

அதோடு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிற காரணத்தால், அங்கே டெல்லியில் இருக்கக்கூடிய தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு, அந்த கடிதத்தினுடைய நகலை அனுப்பி, உடனடியாக சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியை சந்தித்து, நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை நீங்கள் அவரிடத்திலே தரவேண்டும் என்று உத்தரவிட்டேன். அவரும் அதற்கான முயற்சியிலே ஈடுபட்டார்.

இங்கே தொழில் துறை அமைச்சர் தெரிவித்ததுபோல, சம்பந்தப்பட்ட மத்திய மந்திரி வெளியூரில் இருக்கிற காரணத்தால், அவரை நேரில் சந்திக்க இயலவில்லை. எனவே டி.ஆர்.பாலு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவருடன் பேசியபோது, தமிழ்நாட்டினுடைய முதல்-அமைச்சர் அனுப்பியிருக்கக்கூடிய கடிதத்திற்கு நிச்சயமாக நாங்கள் மதிப்பு அளிப்போம், கவலைப்பட வேண்டாம் என்ற ஓர் உத்தரவாதத்தை மத்திய மந்திரி சொன்னதாக ஒரு செய்தியை டி.ஆர்.பாலு என்னிடத்திலே தெரிவித்திருக்கிறார்.

எந்த காரணத்தை கொண்டும், அதற்கு (டெல்டாவில் சுரங்கம் அமைக்க) நிச்சயமாக நம்முடைய தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது, அளிக்காது, அளிக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story