ராசிமணலில் அணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்


ராசிமணலில் அணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
x
தினத்தந்தி 10 Sep 2024 9:38 PM GMT (Updated: 11 Sep 2024 12:34 PM GMT)

தமிழ்நாட்டில் ராசிமணலில் அணை கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் 6 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 22 லட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன நீர் ஆதாரமாகவும் விளங்கும் காவிரி உரிமையை மீட்டெடுக்க நாம் ஒன்றுபட்டு போராட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடக அரசு மேகதாது அணை கட்டி தமிழ்நாட்டில் உபரி நீர் கடலில் கலக்க செய்வதைத் தடுத்து நிறுத்தி, கர்நாடகாவிற்கு குடிநீர் போக, மீதத் தண்ணீரைத் தமிழ்நாட்டிற்கு வழங்குவோம் என்கிற தவறான பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கையைத் தயார் செய்து மத்திய அரசிடம் வழங்கி அதற்கான அனுமதி கோரித் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக மேட்டூர் அணை நிரம்பிய பிறகு காவிரியில் உபரி நீர் கடலில் கலப்பதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு உடனடியாக மேகதாது அணைகட்ட அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடக அரசு நிர்ப்பந்தித்து வருகிறது. பெங்களூர் கனகபுரா தேசிய நெடுஞ்சாலையில்

பெங்களூருக்குக் கிழக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக நிலப்பகுதியில் இருந்து கீழ்நோக்கி ஆயிரம் அடிக்கு கீழே காவிரியும், அர்க்காவதி நதிகளும் இணையும் சங்கமம் என்கிற இடம் சுற்றுலா தலமாக விளங்குகிறது.

இங்கிருந்து காவிரி நதி தமிழகம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கும் வழியில் உயர்ந்த மலை முகடுகளுக்கிடையே அகலம் குறைவான மிக ஆழமான நதியாகவும் உள்ள இடம் மேகதாது ஆகும். இவ்விடத்தில் அமைந்துள்ள காளி கோவில் முதல் தமிழ்நாடு எல்லை துவங்குகிறது. இடது கரை முழுமையும் கிருஷ்ணகிரி வன எல்லைக்கு உட்பட்டது. வலது கரை முழுமையும் ஒகேனக்கல் வரை கர்நாடக எல்லையில் உள்ளது. நீர்வழி பாதையில் காவிரி ஆறு தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. தமிழ்நாட்டிற்கு தற்போது உபரி நீரை மட்டுமே வழங்கி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாதாந்திர தண்ணீரை விடுவித்ததாக கணக்கில் காட்டி கர்நாடக அரசு தப்பித்து வருகிறது.

மேகதாது அணை கட்டப்பட்டால் உபரி நீரும் தமிழ்நாட்டுக்கு வராமல் தடுத்து விட முடியும் என்கிற உள்நோக்கத்தோடு கர்நாடகம் செயல்படுகிறது. எனவே தமிழக அரசு இதில் உடனடியாக முழு கவனம் செலுத்தி தமிழக மக்களுக்கும், விவசாயத்திற்கும் தேவையான தண்ணீரை பெற்றுத் தர வேண்டும். தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு கீழே அணைகள் கட்டி தண்ணீரைத் தேக்க இயலாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் பெருந்தலைவர் காமராஜர் தனது ஆட்சிக் காலத்தில் ஒகேனக்கலுக்கு மேலே கிருஷ்ணகிரி மாவட்ட வன எல்லையில் ராசிமணல் அருகே புதிய அணை கட்டி 63 டிஎம்சி தண்ணீரை மேட்டூர் அணை நிரம்பிய பிறகு உபரி நீர் வெளியேற்றக் கூடிய சூழலில் ராசிமணல் அணையில் தேக்குவதற்கான திட்டத்தின் அடிப்படையில் அடிக்கல் நாட்டியுள்ளார்.

அவ்வாறு தேக்கப்படும் தண்ணீர் மேட்டூர் அணை மூலமாகப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியும். உபரி நீர் கடலில் கலப்பதை மிகைப்படுத்தி மேகதாது அணை கட்ட எடுக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தும் அடிப்படை நோக்கோடு தமிழ்நாட்டில் ராசிமணலில் அணை கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக ராசிமணல் அணை கட்டுமான பணிக்கு ஒத்தக்கருத்தை உருவாக்கிடப் போர்க்கால நடவடிக்கைகளைத் துவங்கிட வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.


Next Story