ரூ.29.95 கோடி உதவித்தொகையை இழந்த தமிழக அரசு - தணிக்கைத்துறை அறிக்கை தகவல்
தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறியதால் ரூ.29.95 கோடி உதவித்தொகை கிடைக்காமல் போனதாக தணிக்கைத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறியதால் குளங்கள் புணரமைத்தல், புதுப்பித்தல் பணிகளுக்கான ரூ.29.95 கோடி உதவித்தொகை கிடைக்காமல் போனதாக தணிக்கைத்துறை தலைவர் அறிக்கை தெரிவித்துள்ளது.
2021 மார்ச்சுடன் முடிந்த ஆண்டிற்கான தணிக்கைத்துறை தலைவர் அறிக்கையில், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசின் பங்களிப்புடன் 49 நீர்ப்பாசன குளங்களை புணரமைத்தல் பணிகள் கடந்த 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பணிகளுக்கான மத்திய அரசின் பங்கைப் பெற தலைமைப் பொறியாளர் குறிப்பிட்ட நடைமுறையின்படி ஆவணங்களைப் பூர்த்தி செய்ய தவறியதாகவும் இதனால் ரூ.7.03 கோடியை மத்திய அரசு தாமதமாக வழங்கியதாவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது தவணையை வெளியிடுவதற்கு முன்பு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக செலவு செய்ததால் ரூ.6.41 கோடிக்குப் பதிலாக ரூ.1.95 கோடியை மட்டுமே மத்திய அரசு வழங்கியதாவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 151 நீர்ப்பாசன குளங்களில் புணரமைத்தல் பணிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகையான ரூ.29.95 கோடி கிடைக்காமல் போனதாகவும் தணிக்கைத்துறை தலைவர் அறிக்கை தெரிவித்துள்ளது.