காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை - தமிழக அரசு


காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை - தமிழக அரசு
x

கோப்புப்படம் 

காவிரி குழு கூட்டத்தில், அதிகாரிகள் நேரில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு தேவையான அனுமதியை உடனுக்குடன் அளித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

"காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை" என்று 16.05.2024 தேதியிட்ட பிரபல நாளிதழில் வெளிடப்பட்டுள்ள செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் அனைத்து கூட்டங்களிலும் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் நேரிலோ அல்லது காணொலி காட்சி மூலமாகவோ தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டின் வாதங்களை வலுவாக முன்வைத்து வருகின்றனர். டெல்லியில் நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கினை பெறுவதற்கு தேவையான கருத்துகள், தக்க புள்ளி விவரங்களுடன் வலுவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 94-வது கூட்டம் புதுச்சேரியில் 21.03.2024 அன்று நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டின் அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் உண்மைக்கு புறம்பாக "காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை" என்ற செய்தி 16.05.2024 நாளிட்ட பிரபல நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இதுபோன்று தமிழ்நாடு அரசு எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கவில்லை என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

பன்மாநில நதிநீர் பிரச்சினை தொடர்புடைய கூட்டங்களில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட தகுந்த வாதங்களை எடுத்துரைத்து வருகின்றனர். மேலும், அக்கூட்டங்களில் நேரில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு தேவையான அனுமதியை உடனுக்குடன் அளித்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் திரித்து கூறுவது ஒரு பிரபலமான நாளிதழுக்கு உகந்ததல்ல. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story