தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தில் மனிதவள மேலாண்மை என்பது அரசு பணியிடங்களை காலியாக்கி ஒழித்துக்கட்டி அவற்றை தனியார்வசம் ஒப்படைத்துவிடும் முயற்சியே ஆகும். எனவே அந்த திட்டத்தை கைவிட வேண்டும். அதேபோல் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அந்த திட்டத்தில் சத்துணவு சமையலர், உதவியாளர், அங்கன்வாடி உதவியாளர்களையும், அரசு ஊழியர்களின் பெற்றோரையும் இணைத்து கட்டணமில்லா சிகிச்சை அளிக்க உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பால்ராஜ், சாலை பணியாளர் சங்க மாநிலச்செயலாளர் யூசப், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்க மாநில பொருளாளர் ஸ்டேன்லி, மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கம் கோபாலகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் மந்திரமுத்து, கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆழ்வார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.