தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கிட்டு தலைமை தாங்கினார். செயலாளர் எல்.சி.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் காசிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நீர்நிலைகளை நிர்மூலமாக்கி, சுற்றுச்சூழலை பாதிக்க வழி வகுக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ உடனே திரும்ப பெற வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க உடனடியாக முத்தரப்பு கூட்டத்தை நடத்தி அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும், எந்தவித ஆய்வும் செய்யாமல் நியாய விலைக் கடைகளிலும், ஊட்டச்சத்து மையங்களிலும் அவசர கதியால் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இதில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.