நவம்பர் 1ஆம் தேதிதான் தமிழ்நாடு தினம்.. வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை
தமிழகம் உருவான தினத்தை விட்டுவிட்டு, பெயர் மாற்றம் செய்த தினத்தை முதல்-அமைச்சர் கொண்டாடுவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
மொழி வாரியாக மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, இன்றைய எல்லைப் பகுதிகளோடு நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெருமை மிகுந்த தமிழகம் இன்று, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும் தனது பொலிவை இழந்து நிற்கிறது. தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின். அதில் ஒன்றுதான், தமிழகம் உருவான தினத்தை விட்டுவிட்டு, பெயர் மாற்றம் செய்த தினத்தைக் கொண்டாடுவது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று கூடப் பாராமல் தமிழகம் முழுவதும் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுகவினரை அடக்கி வைப்பதே, முதல்-அமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்குமே தவிர தன் விருப்பத்துக்கு, நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தை மாற்றுவது அல்ல.
இவ்வாறு அண்ணாமலை கூறியிருக்கிறார்.