பிளஸ்-2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
பிளஸ்-2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
Tamil Nadu CM Stalin launches career guidance program for +2 studentsவழிகாட்டும் திட்டம்
தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழி காட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது.
விழாவில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். தொடர்ந்து நடந்த விழாவிற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் எச்.சி.எல். நிறுவனத்தின் துணைத்தலைவர் சுப்பராமன் பாலசுப்பிரமணியன் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்த கோப்புகளை மாற்றிக்கொண்டனர்.
தொடர்ந்து எந்த கல்லூரியில் என்ன படிப்புகள் படிக்கலாம்? என்பது குறித்த வழிகாட்டி நூலை 5 மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசியதாவது:-
மாநிலத்தின் அறிவு சொத்துகள்
வாழ்க்கையில் பள்ளிக்கல்வி என்ற ஒரு படியை தாண்டி, கல்லூரிக்கல்வியில் அடியெடுத்து வைக்க போகிறீர்கள். மாணவர்கள்தான் மாநிலத்தின் அறிவு சொத்துகள். உங்களை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.
தமிழகத்துக்கு நான் முதல்வராக இருக்கலாம். ஆனால் நீங்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக விளங்க வேண்டும் என்பதற்காக 'நான் முதல்வன்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு அங்கமாகத்தான் இந்த 'கல்லூரி கனவு' நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது
பள்ளிக்கல்வியாக இருந்தாலும், உயர்கல்வியாக இருந்தாலும், திறமை மற்றும் அறிவுசார் கல்வியாக தமிழக அரசு அதனை மாற்றிக்காட்டி வருகிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் உயர இதுதான் காரணமாக அமைந்திருக்கிறது. என்ஜினீயரிங், மருத்துவம் என்பது மிகச்சிறந்த படிப்புகள்தான். ஆனால், அந்த 2 கனவுகளோடு மட்டும் நின்றுவிட வேண்டாம். வாய்ப்புகள் எல்லா துறைகளிலும் ஏராளமாக கொட்டி கிடக்கின்றன.
ஒவ்வொரு துறையிலும் படித்து முன்னேறி, உழைப்பை கொடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றன. ஆகவே, கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி, அந்தந்த துறையில் மிகச்சிறந்த வல்லுநர்கள் ஆவதற்கு, கல்வி நிறுவனங்கள் அளிக்கும் பாடப்பிரிவுகள் குறித்தான ஒரு வழிகாட்டி நிகழ்ச்சிதான் இது. பல திறன்கள், தனித்திறன்கள் கொண்டிருக்கக்கூடிய சமுதாயத்தை உருவாக்குவதே நம் நோக்கம்.
விரக்தி மனோபாவம் வேண்டாம்
தமிழகத்தில் ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகளாக 100 கல்லூரிகளை தேர்வு செய்தால், அதில் 30 கல்லூரிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. நம்மால் முடியும் என்ற தைரியம் வேண்டும். நல்ல மொழியாற்றல் வேண்டும். தமிழ் மொழியாக இருக்கக்கூடிய நம்முடைய தாய்மொழியான தமிழிலும் உலக மொழியாக இருக்கக்கூடிய ஆங்கிலத்திலும் எழுத, பேச, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு விரக்தி மனோபாவம் என்பது ஒருபோதும் இருக்கக்கூடாது. உங்களோடு மற்றவர்களை ஒப்பீடு செய்யாதீர்கள். இந்த பண்புநலன்கள் எல்லாம் ஒருவருக்கு நல்ல கல்வியால்தான் அமைந்திட முடியும். கலையில், அறிவியலில், மருத்துவத்தில், என்ஜினீயரிங்கில், சட்டத்தில் என உங்களது அறிவு மேம்பாடு அடையட்டும். உங்களின் வளர்ச்சியை பார்த்து ரசிக்கக்கூடிய, பெருமைப்படும் ஒரு தந்தையாக, நிச்சயம் நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்.
வெற்றியாளர்களாக செதுக்கியது
வருகிற 2026-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் 2 மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும். அதில் நீங்களும் இடம்பெற்றுள்ளீர்கள். அதேபோல, 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். அதில் உங்கள் பங்கும் இருக்க வேண்டும். ஒரு மனிதனின் மாபெரும் சொத்து என்பது அவனது கல்விதான். அதனால்தான் அதனை யாராலும் திருட முடியாத சொத்து என்று நான் திரும்ப திரும்ப சொல்லி வருகிறேன். வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம், கல்வியின் அவசியத்தை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
கல்வி உரிமையை நாம் போராடி பெற்றிருக்கிறோம், தயவு செய்து அதை யாரும் மறந்துவிடக்கூடாது. கல்வியை சிறுமைப்படுத்தி பேசக்கூடிய யாருடைய பேச்சையும் நீங்கள் காதில் வாங்காதீர்கள். படிப்பில் கவனம் செலுத்துங்கள். நம்முடைய இளைஞர்களில் பல முதல்வர்களை உருவாக்கும் இந்த திட்டத்துக்கு, நான் தமிழக முதல்வராக வரவில்லை. உங்களில் ஒருவனாகத்தான் வந்திருக்கிறேன். கல்வியால் அடையும் புகழ்தான் நிலையானது. இந்த நிகழ்ச்சி வெறும் வழிகாட்டி நிகழ்ச்சி மட்டுமல்ல. கல்வி, விளையாட்டு, கலைத்திறன், தொழில்நுட்பம் என்று ஒவ்வொரு துறையிலும் தமிழக இளைஞர்களை வெற்றியாளர்களாக, செதுக்கிய நிகழ்ச்சிதான் இது. உலகை வெல்லக்கூடிய இளைய தமிழகத்தைப் படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக தலைமைச் செயலாளர் இறையன்பு வரவேற்றார். நிகழ்ச்சியில் தொழில் வழிகாட்டுதல் அமர்வுகளில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கல்பாத்தி சுரேஷ், பிரோமானந்த், மைக் முரளி, வணங்காமுடி, டாக்டர் அசோகன், ஓய்வு பெற்ற நீதிபதி விமலா, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வி.பி.ஜெயசீலன், சுஜித்குமார் மற்றும் கோபிநாத் ஆகியோர் பேசினர்.