கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் கனவு நிகழ்ச்சி
கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் கனவு நிகழ்ச்சி பெரம்பலூரில் இன்று நடக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான தமிழ் கனவு-தமிழர் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்ட நிகழ்வினை 2-ம் கட்டமாக சிறப்பாக நடத்துவது தொடர்பான சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது கலெக்டர் கற்பகம் பேசுகையில், 2-ம் கட்டமாக தமிழ் கனவு என்ற நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது. இதில் தமிழ் இணைய கல்வி கழகம் மூலம் டாக்டர் சிவராமனும், தமிழக அரசின் மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர் நர்த்தகி நடராஜிம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 12 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள உள்ளார்கள். எனவே, அரசு துறைகளின் சார்பில் திட்ட விளக்க அரங்குகளும், இந்நிகழ்வில் அமைக்கப்பட வேண்டும். நிகழ்ச்சி அரங்கில் தமிழ் பெருமிதம் நூலில் அந்த நேரத்தில் பிரித்து தரப்படும் ஏதாவது ஒரு பக்கத்தை வாசித்து அது குறித்த தங்கள் கருத்தை ஒரு நிமிடத்திற்குள் சிறப்பாக வழங்கும் மாணவர்களுக்கு பெருமித செல்வன் என்ற பெயரில் பரிசுகளும், மாணவிகளுக்கு பெருமித செல்வி என்ற பெயரில் பரிசுகளும், நிகழ்ச்சி பேசப்படும் தலைப்புகள் குறித்த தரமான கேள்விகளை எழுப்பும் மாணவர்களுக்கு கேள்வியின் நாயகன் என்ற பெயரில் பரிசுகளும், மாணவிகளுக்கு கேள்வியின் நாயகி என்ற பெயரில் பரிசுகளும் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறவுள்ள மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக வந்து செல்ல ஏதுவாக சம்பந்தப்பட்ட கல்லூரி நிறுவனங்கள் பஸ் வசதி செய்திட வேண்டும். அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் உரிய பஸ் வசதி செய்திடவேண்டும். தமிழ் கனவு என்கிற நிகழ்ச்சி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் சிறப்புள்ளதாக அமைந்திட ஒவ்வொருவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும், என்றார்.