தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 37 ஆர்.சி. புத்தகங்கள் மாயம் - 5 ஊழியர்கள் பணியிடை நீக்கம்
தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 37 ஆர்.சி. புத்தகங்கள் மாயமானது. இதுக்குறித்து 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் தர்காஸ் சாலையில் உள்ள தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த வாரம் புதிய வாகனப்பதிவு செய்யப்பட்ட 37 வாகனங்களின் ஆர்.சி. புத்தகங்கள் (ஸ்மார்ட் கார்டுகள்) மாயமானது. இது குறித்து தகவல் அறிந்த தென் சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் ஜெய்சங்கர், தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விசாரணை நடத்தினார்.
பின்னர் போக்குவரத்து கமிஷனர் நிர்மல்ராஜூம் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலரின் உதவியாளர் விஜயகுமார், கண்காணிப்பாளர்கள் பாலாஜி, காளத்தி, இளநிலை உதவியாளர்கள் சாந்தி, தாமோதரன் ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மாயமான 37 ஆர்.சி. புத்தகங்களும் செயலிழக்க (டிஆக்டிவேட்) செய்யப்பட்டு புதிய ஆர்.சி. புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் மாயமான ஆர்.சி. புத்தகங்களை வைத்து யாராலும், எதற்காகவும் பயன்படுத்த முடியாது.
இதுதொடர்பாக தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் ஊழியர்கள் யாராவது உடந்தையாக செயல்பட்டனரா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 5 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பெரும்பாலான பணிகள் முடங்கியுள்ளது.