ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய தமிழக அவசர கட்டுப்பாட்டு மையம் மூலம் 132 பேரிடம் பேச்சுவார்த்தை
ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய 132 பேருடன் தமிழக அரசின் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பேசியுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
ரெயில் விபத்து
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பட்டு மையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் ரெயில், பெங்களூரு- ஹவுரா விரைவு ரெயில் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதிக்கொண்டன.இதில் சுமார் 230 பேர் வரை இறந்து இருப்பதாக ஒடிசா அரசாங்கத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. இன்னும் முழு விவரம் வரவில்லை.
அமைச்சர்கள் ஒடிசா பயணம்
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக சென்றிருக்கிறார்கள்.முதல்-அமைச்சர், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன உதவிகள் வேண்டும்? என்பதை செய்வதற்காக தமிழகத்தில் இருந்து வருவாய் துறை சார்பிலும் அதிகாரிகள் ஒடிசா சென்றுள்ளனர்.
8 பேர் அழைப்பு
கோரமண்டல் விரைவு ரெயிலில் பயணம் செய்த127 பேரை தொடர்பு கொண்டு வேண்டிய உதவிகளை செய்து வருகிறோம். ஹவுரா ரெயிலில் 5 பேரிடம் பேசி உள்ளோம். 132 பேரிடம் நேற்று காலை மட்டும் பேசி உள்ளோம். இது தவிர பாதிக்கப்பட்டவர்கள் 8 பேர் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை அழைத்து இருக்கிறார்கள். தேவைப்படும் பட்சத்தில் விமானம் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அழைத்து வரப்படுவார்கள்.
3 தாசில்தார் சென்று இருக்கிறார்கள், 2 துணை மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள் 2 பேர் என மொத்தம் 7 பேர் ஒடிசா சென்று உள்ளார்கள். இவர்களுக்கு இரு மொழிகளும் தெரியும் அவர்களை மட்டுமே தற்போது அனுப்பி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வருவாய் நிர்வாக கமிஷனர் பிரபாகரன், மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மைய இயக்குனர் ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.