பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களுடன் பேச்சு - சென்னை வாலிபர் கைது
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களுடன் பேசியதாக வந்த தகவலின் அடிப்படையில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
சென்னை ஆர்.கே.நகரைச் சேர்ந்தவர் ராஜா முஹம்மது (வயது26). இவர் கடந்த ஒரு வருடமாக திருவள்ளூர் லங்காகார தெருவில் உள்ள அவரது மாமனார் வீட்டில் வசிக்கிறார். அவர் அவர் அங்குள்ள இறைச்சி கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், ராஜா முஹம்மது சவூதியில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள நபர் ஒருவருடன் சிக்னல் என்ற செயலியின் உதவியுடன் பேசியதாக குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு சென்னை குற்றப்புலனாய்வு சிறப்பு பிரிவு போலீசார் இவரை கைது செய்தனர்.
கைது செய்த பின்னர் ராஜா முஹம்மதிடம் மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் வைத்து சுமார் 18 மணி நேரம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் (என்.ஐ.ஏ) மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் (ரா) விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், சட்டவிரோதமாக செயல்படும் சிக்னல் என்ற சமூக வலைதளத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களுடன் பேசியதாகவும், அதில் பேசிய நபர் ராஜா முஹம்மதுவை சவுதிக்கு வரும்படியும், அதற்கான பாஸ்போர்ட் ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் கூறியதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ராஜா முஹம்மது மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக கூறி திருவள்ளூர் டவுன் போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து குற்றவியல் நடுவர் நீதிபதி மூகாம்பிகை முன்னிலையில் ஆஜர் படுத்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைத்தனர்.