கருணாநிதி பிறந்தநாளில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கலெக்டர் தகவல்
கருணாநிதி பிறந்த நாளில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடக்க உள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கடலூர்,
பேச்சுப்போட்டி
தமிழக அரசு உத்தரவின்பேரில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அன்றைய தினம் பேச்சுப்போட்டிகள் நடத்த உத்தரவிட்டது. ஆனால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த பிறகு மற்றொரு நாளில் கடலூர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்படும்.
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுப்போட்டிகள் நடக்கிறது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
பெயர் பட்டியல்
ஆகவே கல்லூரி முதல்வர்கள் தங்களுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களிடையே முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சுப் போட்டிகள் நடத்தி மாணவர்களை தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க 2 மாணவர்களுக்கு மிகாமல் அனுப்ப வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர் பட்டியல் பின்வரும் முகவரியில் நேரிலோ, அஞ்சலிலோ அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் 1.6.2022-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த பேச்சுப்போட்டியில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். மேற்கண்ட தகவலை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.