நாகராஜா கோவிலில் தைத்திருவிழா தேரோட்டம்


நாகராஜா கோவிலில் தைத்திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 4 Feb 2023 6:45 PM GMT (Updated: 5 Feb 2023 3:37 PM GMT)

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நாகராஜா கோவில்

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகராஜா கோவிலும் ஒன்று. தமிழகத்தில் நாகதோஷ பரிகார தலங்களில் நாகரே மூலவராக வீற்றிருப்பது இங்கு மட்டும் தான். இதனாலேயே வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபாடு செய்கிறார்கள். இப்படி சிறப்பு மிகுந்த நாகராஜா கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இதேபோல இந்த ஆண்டுக்கான தை்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வாகன பவனி, சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

தேரோட்டம்

இந்த நிலையில் 9-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு பாமா மற்றும் ருக்மணியுடன் அனந்த கிருஷ்ணர் தேரில் எழுந்தருளினார். அதன் பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து 8.10 மணிக்கு தேரானது நிலையில் இருந்து புறப்பட்டது. தேரை ஏராளாமான ஆண்களும், பெண்களும் சேர்ந்து வடம் பிடித்து இழுத்தனர்.

முன்னதாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் ஆனந்த், ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன், கணக்கர் சிதம்பரம், பா.ஜனதா மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட துணைத்தலைவர் தேவ், மாநகராட்சி கவுன்சிலர்கள் அக் ஷயா கண்ணன், ஸ்ரீலிஜா, தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் இ.என்.சங்கர், 27-வது வட்ட தி.மு.க. செயலாளர் பீனிக்ஸ் கண்ணன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன், ஒப்பந்ததாரர் கணேசன், கோவில் மேல்சாந்திகள் நாராயணன் நம்பூதிரி, கிருஷ்ணதாஸ் நம்பூதிரி, கேசவன் நம்பூதிரி, ஹரிஷா நம்பூதிரி மற்றும் சிவசங்கர், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பக்தி கோஷம்

தேரோட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனர். ஹரே கிருஷ்ணா...ஹரே கிருஷ்ணா என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரை பின்னால் இருந்து உந்தக்கூடிய கட்டையை தூக்கி போடுவதற்காக யானை வரவழைக்கப்பட்டு இருந்தது. அந்த யானை கட்டையை தூக்கி வந்து போடும் காட்சியை பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். மேலும் யானை முன் நின்றும் பலர் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து தேரானது 4 ரத வீதியையும் சுற்றி நிலைக்கு வந்து சேர்ந்தது. ஆடி அசைந்து வந்த தேரை ஏராளமான மக்கள் வீடுகளின் மாடியில் நின்றும், ரத வீதிகளின் இருபுறமும் நின்றும் பார்த்து சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானங்கள், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தேரோட்டத்தையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஆராட்டு நிகழ்ச்சி

தேர் நிலைக்கு வந்ததும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாலையில் இன்னிசை, பியூசன் கச்சேரி, மண்டகப்படி, இரவில் சப்தாவர்ணம் நிகழ்ச்சி ஆகியவை நடந்தன.

விழாவின் இறுதி நாளான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு நாகராஜா கோவில் தெப்பகுளத்தில் வைத்து ஆராட்டு நிகழ்ச்சி, ஒழுகினசேரி ஆராட்டுத்துறையில் இருந்து சாமி எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.


Next Story