திருத்துறைப்பூண்டி மாணவிக்கு ரூ.25 ஆயிரம் தாசில்தார்-சர்வேயர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்
திருத்துறைப்பூண்டி மாணவிக்கு ரூ.25 ஆயிரம் தாசில்தார்-சர்வேயர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்
திருத்துறைப்பூண்டி மாணவிக்கு ரூ.25 ஆயிரம் தாசில்தார்- சர்வேயர் நஷ்ட ஈடு வழங்க வேண்டு்ம் என்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சர்வேயரிடம் ரசீது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விட்டுகட்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் சினேகா. இவர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு முதுகலை கணினியில் படித்து வருகிறார்.
இவருக்கு சொந்தமாக விட்டுகட்டியில் வீடு உள்ளது. அதனை அளந்து சரிபார்த்திட திருத்துறைப்பூண்டி தாசில்தார் மூலம் மனு அளித்தார். அதற்கு நிலத்தை அளந்து கல்பதிக்க ரூ. ஆயிரத்தை திருத்துறைப்பூண்டி மாநில வங்கியில் அரசு கணக்கில் செலுத்தினார். கடந்த 2021-ம் ஆண்டு தொகையை செலுத்தி சர்வேயரிடம் ரசீது கொடுத்தும் வருவாய்த்துறையினர் நிலத்தை அளக்க வராமல் அலட்சியமாக இருந்துள்ளனர். திருத்துறைப்பூண்டி வக்கீல் நாகராஜன், நில அளவை செய்யவும் மற்றும் நஷ்டஈடு கேட்டும் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து தாசில்தார், சர்வேயர் கோர்ட்டில் ஆஜராகி, காலதாமதம் இல்லை நேரம் கிடைக்கும் போது அளவை செய்வோம் என்றனர்.
ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு
புகாரையும், ஆவணங்களையும் பரிசீலித்த நீதிமன்ற பெஞ்ச் நீதிபதி சக்ரவர்த்தி, நீதிமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், பாக்யலட்சுமி ஆகியோர் கட்டணம் பெற்றுக்கொண்டு 18 மாதங்கள் புகார்தாரருக்கு நிலத்தை அளவையிட்டு கல் பதிக்காமல் காலதாமதம் செய்தது செயல்குறைபாடு தான். எனவே
அலட்சியமாக மாணவியை அலைய செய்ததற்காகவும், மன உளைச்சலுக்காவும் நஷ்ட ஈடாக ரூ.20 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்றும், 2 மாதத்திற்குள் நிலத்தை அளந்து கல்பதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். நஷ்டஈடு தொகையை 2 மாதங்களுக்குள் செலுத்த தவறினால் ஆண்டு ஒன்றுக்கு நூற்றுக்கு 9 சதவீதம் வட்டி சேர்த்து புகார்தாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.