அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.10 லட்சத்தில் மேஜை, நாற்காலிகள்


அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.10 லட்சத்தில் மேஜை, நாற்காலிகள்
x

பூண்டி ஊராட்சியில் உள்ள அரசினர்மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள மேஜை, நாற்காலிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை

மேஜை, நாற்காலிகள்

காவேரிப்பாக்கத்தை அடுத்த பூண்டி ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு தனியார் ஷூ கம்பெனியின் சி.எஸ்.ஆர் நிதி மூலம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 100 மேஜை, நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மேஜை, நாற்காலிகளை வழங்கி பேசினார். அப்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மக்களாட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகள் மட்டுமின்றி ஏனைய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றார். பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம் இன்று ஏராளமான குழந்தைகள் காலை உணவினை சாப்பிட்டு வருகின்றனர். அதே போன்று கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கி வருகின்றார்.

நீட் தேர்வில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் மருத்துவப் படிப்பு முடியும் வரை அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.

முயன்றால் அனைத்தும் சாத்தியம்

மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு கருதி தற்போது பழைய பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. பூண்டி மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும். முடியாது என்பது எதுவுமே கிடையாது. முயன்றால் அனைத்துமே சாத்தியமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தனியார் ஷூ கம்பெனி மேலாண்மை இயக்குநர் டாக்டர்.கே.வெங்கடாஜலபதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மாலதி கணேசன், பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் கங்காபாய் ரேணு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ரேணு மற்றும் ரமேஷ்கோரா, சதீஷ்கோரா, நிறுவன மேலாளர் பாஸ்கரன் உள்பட ஆசிரியர், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.


Next Story