'லிப்ஸ்டிக்' போட்டதால் தபேதார் இடமாற்றம்? - மேயர் அலுவலகம் விளக்கம்


லிப்ஸ்டிக் போட்டதால் தபேதார் இடமாற்றம்? - மேயர் அலுவலகம் விளக்கம்
x

தபேதார் மாதவியின் இடமாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை என்று மேயர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.

சென்னை,

சென்னை மேயர் பிரியாவின் தபேதாராக மாதவி (50 வயது) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் ஆவார். சென்னை மாநகராட்சி கூட்டம் உள்பட முக்கிய நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா பங்கேற்கும்போது அவருடன் தபேதார் மாதவி செல்வார்.

மாதவி உதட்டில் கலர் கலராக 'லிப்ஸ்டிக்' பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். 'லிப்ஸ்டிக்' பயன்படுத்தக்கூடாது என்று அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் தொடர்ந்து 'லிப்ஸ்டிக்' பூசி வந்துள்ளார். கடந்த மாதம் மேயர் பிரியாவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற தபேதார் மாதவி 'லிப்ஸ்டிக்' பயன்படுத்தி உள்ளார். இதனை மேயர் பிரியாவின் உதவியாளர் கண்டித்தார்.

இந்த நிலையில் தபேதார் மாதவி திடீரென்று மணலி மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணியில் அலட்சியம், உரிய நேரத்தில் பணிக்கு வராதது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது ஆகிய காரணங்களினால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவருக்கு கடந்த ஆகஸ்ட் 6-ந்தேதி மெமோ அனுப்பப்பட்டது. அந்த மெமோவுக்கு பதிலளித்த மாதவி, ''நான் லிப்ஸ்டிக் பூசக்கூடாது என்று நீங்கள் கூறினீர்கள். ஆனால் நான் லிப்ஸ்டிக் பூசினேன். இது குற்றம் என்றால் லிப்ஸ்டிக் பூசக்கூடாது என்று தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை காட்டுங்கள். சென்னை மாநகராட்சி போன்ற ஒரு அமைப்பில் மனித உரிமைகளை மீறும் வகையிலான இத்தகைய விதிமீறல் கவலையளிக்கிறது'' என கூறி இருந்தார்.

லிப்ஸ்டிக் பூசி பணிக்கு வரக்கூடாது என்ற உத்தரவை மீறியதாலேயே தான் தண்டிக்கப்பட்டுள்ளதாக தபேதார் மாதவி குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக சென்னை மேயர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, தபேதார் மாதவியின் இடமாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் பணிக்கு சரிவர வராத காரணத்தால்தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story