மூடி கிடக்கும் நீச்சல்குளம்


மூடி கிடக்கும் நீச்சல்குளம்
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் பல லட்சம் செலவில் தொடங்கப்பட்ட நீச்சல்குளம் பராமரிப்பு இன்றி மூடிகிடப்பதால் கோடைகால பயிற்சி பெறமுடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பல லட்சம் செலவில் தொடங்கப்பட்ட நீச்சல்குளம் முறையான பராமரிப்பு இன்றி மூடிகிடப்பதால் கோடைகால பயிற்சி பெறமுடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

நீச்சல்குளம்

ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கின் எதிரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கடந்த 2003-ம் ஆண்டு நீச்சல் குளம் உருவாக்கப்பட்டது. இதற்கென தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு ஏராளமானோர் நீச்சல் பயிற்சி பெற்று வந்தனர். இங்கு நீச்சல் பழக தனி நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.50 மற்றும் மாத கட்டணம் என்றால் ரூ.700, மாணவர்களுக்கு ஆண்டு கட்டணம் ரூ.2 ஆயிரம், ஒரு குடும்பத்திற்கு ரூ.7 ஆயிரத்து 500 ஆண்டு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இந்த நீச்சல் குளம் அடிக்கடி மூடப்படுவதும், பின்னர் சிறிய மராமத்து செய்து திறக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. இதையடுத்து கொரோனா காலத்தில் மூடப்பட்ட இந்த நீச்சல்குளம் கடந்த 3 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது.

பயிற்சி செய்ய முடியாத நிலை

தற்போது இந்த நீச்சல் குளத்தில் உள்ள அனைத்து உபகரணங்கள், எந்திரங்கள் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளன. நீச்சல் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள டைல்ஸ் தரை தளங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. தண்ணீரை சுத்திகரித்து மாற்றுவதற்கான எந்திரமும் சேதமடைந்துள்ளது. குளோரினேசன் மையம் செயல்பட முடியாத நிலையில் உள்ளது.

மின்மோட்டார்களும் பழுதடைந்துள்ளது. மேலும், மோட்டார் அறைக்கு செல்லும் மின் வயர்கள் அனைத்தும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு ராமநாதபுரத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

நிதி

இதுகுறித்து விளையாட்டு துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது அவர் கூறியதாவது:- நீச்சல்குளம் அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளாகி விட்டதால் அதனை சிறிய அளவில் மராமத்து செய்வது என்பது இயலாத நிலை உள்ளது. முழுமையாக மராமத்து செய்ய அதிக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் ரூ.37 லட்சம் செலவாகும் என கணக்கிடப்பட்டு அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். நிதி வந்ததும் சீரமைத்து நீச்சல் குளம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story