தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் திருவீதி உலா
மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமேசுவரம்,
மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அஷ்டமி பிரதட்சணம்
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
காலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 7 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதர்த்தினிஅம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.
பக்தர்களுக்கு படி அளக்கும் நிகழ்ச்சி
கோவிலில் இருந்து எழுந்தருளிய சுவாமி-அம்பாள் தெற்கு ரத வீதி, மேற்குரத வீதி, நடுத்தெரு, திட்டக்குடி சந்திப்பு சாலை வழியாக ராமதீர்த்தம், லட்சுமணதீர்த்தம் வரை ஊர்வலமாக வந்து அங்கிருந்து வர்த்தகன் தெரு, மார்க்கெட் தெரு, நகரின் பல முக்கிய பகுதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து பகல் 12:30 மணிக்கு சுவாமி-அம்பாள் மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தனர்.
அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு சாமி-அம்பாள் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே பக்தர்களுக்கு நேரில் வந்து படி அளப்பதாக கூறப்படுகின்றது. அதுபோல் நேற்று சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து எழுந்தருளிய நிகழ்ச்சியை தொடர்ந்து 7 மணி முதல் 12.30 மணி வரை கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.