மாணவிகளை ஆபாச படம் எடுத்த ஆசிரியர் பணி இடைநீக்கம்


மாணவிகளை ஆபாச படம் எடுத்த ஆசிரியர் பணி இடைநீக்கம்
x

நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளை ஆபாச படம் எடுத்த ஆசிரியா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பள்ளி ஆசிரியர்

நாமக்கல் மாவட்டம் கீரம்பூரில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம். இவர் பள்ளி மாணவிகளை ஆபாச படம் மற்றும் வீடியோ எடுத்து தரக்குறைவாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் ஆசிரியர் பன்னீர்செல்வத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கிருந்த பள்ளி தலைமை ஆசிரியை சர்மிளா, ஆசிரியர் பன்னீர்செல்வத்தை பாதுகாப்பு கருதி அங்குள்ள அறையில் பூட்டி வைத்து விட்டு பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போக்சோவில் கைது

உடனடியாக அங்கு வந்த பரமத்தி போலீசார் மற்றும் நாமக்கல் கூடுதல் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், பரமத்திவேலூர் துணை சூப்பிரண்டு கலையரசன் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பெற்றோர்கள் ஆசிரியர் பன்னீர்செல்வத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட கலெக்டர், கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவேண்டும் எனக்கூறி சம்பந்தப்பட்ட ஆசிரியரை பரமத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல விடாமல் முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகு பெற்றோர்கள், ஆசிரியர் பன்னீர்செல்வத்தை போலீசாருடன் செல்ல வழி விட்டனர்.

பணி இடைநீக்கம்

இதையடுத்து மாணவிகளை ஆபாசமாக படம் மற்றும் வீடியோ எடுத்ததுடன், தரக்குறைவாக திட்டியதாகவும் ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கல் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ஆசிரியர் பன்னீர்செல்வத்தை மாவட்ட கல்வி அலுவலர் ரவி பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story