திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு குடிபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் பணியிடை நீக்கம் உடந்தையாக இருந்ததாக கண்டக்டர் மீதும் நடவடிக்கை
திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு குடிபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக கண்டக்டர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ், திருப்பதிக்கு சென்று பயணிகளை இறக்கி விட்டதும் மீண்டும் அங்கிருந்து வந்தவாசி வழியாக புதுச்சேரிக்கு புறப்பட்டது.
இந்த பஸ்சை திண்டிவனம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக வேலை பார்க்கும் தரணேந்திரன் என்பவர் ஓட்டிச்சென்றார். கண்டக்டராக ஹோலிபேஸ் என்பவர் பணியில் இருந்தார். பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
குடிபோதையில் இயக்கிய டிரைவர்
இந்த பஸ்சின் டிரைவர் தரணேந்திரன் குடிபோதையில் இருந்துள்ளார். போதை தலைக்கேறியதால் அவர் தாறுமாறாக பஸ்சை இயக்கினார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் மிகவும் அச்சத்துடன் பயணித்தனர்.
இதுபற்றி பஸ் பயணிகள், கண்டக்டரிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இருப்பினும் டிரைவர் தரணேந்திரன், குடிபோதையில் தொடர்ந்து பஸ்சை தாறுமாறாக ஓட்டிச்சென்றார்.
இதனால் ஆபத்தை உணர்ந்த கண்டக்டர் ஹோலிபேஸ், அந்த பஸ்சை வந்தவாசி வரை இயக்கிவந்து பாதுகாப்பாக நிறுத்தினார். அதன் பிறகு அந்த பஸ்சை அங்கிருந்து தொடர்ந்து இயக்கவிடாமல் பயணிகள் தடுத்தனர். பின்னர் வந்தவாசி போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசாரிடம் டிரைவர் தரணேந்திரனை ஒப்படைத்தனர்.
பணியிடை நீக்கம்
மேலும் இதுபற்றி விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர். இதனிடையே மாற்று டிரைவர் வரவழைக்கப்பட்டு வந்தவாசியில் இருந்து அந்த பஸ், புதுச்சேரிக்கு இயக்கப்பட்டது. குடிபோதையில் இருந்த டிரைவரிடம் பயணிகள் கடும் வாக்குவாதம் செய்த தகவல் வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் குடிபோதையில் இருந்த பஸ் டிரைவர் தரணேந்திரனையும், இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக கண்டக்டர் ஹோலிபேசையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் செல்வமணி உத்தரவிட்டுள்ளார்.