சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு செய்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம்


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு செய்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு செய்த போலீஸ்காரர் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவரும், உடந்தையாக இருந்த சகோதரியும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 26-ந்தேதி தனியார் கல்லூரி ஒன்றில் சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு துறை பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. அப்போது ஒரு அறையில் வித்தியாசமாக சத்தம் கேட்டது. இதையடுத்து கண்காணிப்பாளர்கள் சோதனை செய்த போது ஒருவர் ஹெட்போனை வைத்து (வாய்ஸ் டிரான்ஸ்மீட்டர் கருவி) தேர்வு எழுதியது தெரியவந்தது.

மேலும் வெளியில் இருந்து ஒருவர் பதில் கூற, அதைக் கேட்டு இவர் தேர்வு எழுதியது தெரியவந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில், அந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பச்சூரை சேர்ந்த நவீன் (வயது 26) என தெரியவந்தது. போலீஸ்காரரான அவர், கோயமுத்தூர் கோவைபுதூர் போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்ததும் தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதிய நவீனுக்கு, அவரது சகோதரி சித்ரலேகா (20) வீட்டில் இருந்து பதில்களை கூற அதை 'வாய்ஸ் டிரான்ஸ்மீட்டர்' கருவி மூலமாக கேட்டு அவர் தேர்வை எழுதியது தெரிய வந்தது. சித்ரலேகா தொலைதூர கல்வி மூலமாக பி.ஏ. வரலாறு 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து நவீன், சித்ரலேகா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரையும் ஓசூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் நவீன் ஓசூர் கிளை சிறையிலும், சித்ரலேகா சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

பணி இடைநீக்கம்

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு செய்த வழக்கில் கைதான போலீஸ்காரர் நவீனை, பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து கோவைபுதூர் போலீஸ் பயிற்சி மைய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.


Next Story