தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நிறுத்தம்
கொளப்பள்ளி அருகே தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பந்தலூர்
கொளப்பள்ளி அருகே தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சாலையோர தடுப்புச்சுவர்
பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே எடத்தால் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கொளப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் இருந்து செல்ல வேண்டும். இது மழவன் சேரம்பாடி அய்யன்கொல்லிக்கு இணைப்பு சாலையாக உள்ளது. கடந்த மாதம் தொடர் மழை பெய்தது. அப்போது சாலையோர தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் சாலை பெயர்ந்து விழுந்து, துண்டிக்கப்படும் நிலை காணப்பட்டது.
இதையடுத்து கூடலூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து ஒப்பந்ததாரர் மூலம் பணி தொடங்கி நடந்து வந்தது. இதற்கிடையே தரமான முறையில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட வில்லை என தெரிகிறது. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தடுப்புச்சுவர் கட்டும் பணி திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். மேலும் அப்பகுதியில் கட்டுமான பொருட்கள் கொட்டப்பட்டு உள்ளது.
தார்ச்சாலை
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஏற்கனவே சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். அவசர தேவைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள், ரேஷன் பொருட்கள் வாங்க கொளப்பள்ளிக்கு நடந்து சென்று வருகிறோம். நோயாளிகள், கர்ப்பிணிகளை அவசர தேவைக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கூட வருவது இல்லை. இதனால் நோயாளிகளை தொட்டில் கட்டி சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, நிறுத்தப்பட்ட பணியை மீண்டும் தொடங்கி தரமாக தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். அத்துடன் தார்ச்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.