கோவில் உண்டியல் காணிக்கை திருட்டு: அறநிலையத்துறை ஊழியர் பணி இடைநீக்கம்
சேலத்தில் கோவில் உண்டியல் காணிக்கையை திருடிய புகாரில் அறநிலையத்துறை ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம்,
உண்டியல் காணிக்கை
சேலம் செவ்வாய்பேட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் கடந்த மாதம் ஆடி திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. சேலம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். திருவிழாவையொட்டி கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் பக்தர்கள் அதிகளவில் காணிக்கைசெலுத்தியிருந்தனர்.
இந்தநிலையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோவிலில் அர்ச்சனை சீட்டு விற்பனை செய்யும் ஊழியர் செல்லமுத்து என்பவர் உண்டியல் பணத்தை திருடிவிட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் கோவில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் பணத்தை திருடவில்லை என்று கூறினார்.
பணி இடைநீக்கம்
அதேசமயம், ஒரு பக்தர் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகையை நேரில் சந்தித்து கோவில் ஊழியர் செல்லமுத்து, பணத்தை திருடியதை தான் நேரில் பார்த்ததாகவும், அவரிடம் விசாரித்தால் உண்மை தெரியவரும் என்றும் கூறினார். இதனையடுத்து கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, செல்லமுத்துவை அழைத்துவிசாரித்தார்.
அப்போது அவர் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லமுத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கோவில் ஊழியர் செல்லமுத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவரை பணி இடைநீக்கம் செய்து கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை நேற்று உத்தரவிட்டார்.