கம்பியுடன் லாரியை விட்டுச்சென்ற மர்மநபர்களால் பரபரப்பு
இலுப்பூரில், இரும்பு கடையில் திருடிய கம்பியுடன் லாரியை விட்டு சென்ற மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பிகள் திருட்டு
இலுப்பூர் அருகே ராப்பூசலை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 42). இவர் இலுப்பூர் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் இரும்பு கம்பி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கனகராஜ் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இதையடுத்து இவரது கடைக்கு பின்பக்கம் உள்ள தகரத்தை மர்மநபர்கள் அறுத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த இரும்பு கம்பிகளை திருடி லாரியில் ஏற்றியுள்ளனர்.
பரபரப்பு
இதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து பொதுமக்கள் அங்கு வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த மர்மநபர்கள் லாரியை இரும்பு கம்பியோடு அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கனகராஜ் கடைக்கு விரைந்து வந்தார். பின்னர் இதுகுறித்து இலுப்பூர் போலீசாருக்கு அவர் தகவல் அளித்தார். தகவலின் பேரில், போலீசார் விரைந்து வந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் திருடிய கம்பிகளை லாரியுடன் விட்டு சென்ற மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.