தண்ணீர் தொட்டி இடிந்து பெண் பலி: நாரைக்கிணறு ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம்
தண்ணீர் தொட்டி இடிந்து பெண் பலி: நாரைக்கிணறு ஊராட்சி செயலாளர் பணி இடைநீக்கம்
ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு ஊராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு உறுப்பினர் ரம்யா. இவரது கணவர் முருகன். இவர் பெரிய கிணறு பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக அவரது சொந்த செலவில் புதிய தண்ணீர் தொட்டி கட்டி கொடுத்தார். அதன் பணிகள் முழுமை அடையாமல் இருந்து வந்தது. இதற்காக முருகன் ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை.
இந்த நிலையில் அந்த தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிய பாப்பாத்தி (வயது 55) என்பவர் பலியானார். ஊராட்சியின் அனுமதியின்றி தண்ணீர் தொட்டி கட்டியதால் தான் விபத்து ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட்டதாக ஊராட்சி தலைவர் ரங்கசாமி ஆயில்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் கலையரசன் நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்பேரில் நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் (கிராம ஊராட்சிகள்) நாரைக்கிணறு ஊராட்சி செயலாளர் கருணாகரனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே ஊராட்சி செயலாளர் கருணாகரன் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.