கட்சி பொறுப்புகளில் இருந்து சூர்யா சிவா 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு
சூர்யா சிவாவை கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் மாநிலத் தலைவர் அண்ணாமலை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
சென்னை,
பாஜகவின் ஓபிசி பிரிவு பொதுச் செயலர் சூர்யா சிவாவை கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் மாநிலத் தலைவர் அண்ணாமலை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ;
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் அவர்களுக்கும் ஓ.பி.சி. அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனக சபாபதி அவர்களிடம் 22.11.2022 அன்று தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், திருப்பூரில் இன்று ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு முன் திரு சூர்யா சிவா மற்றும் டெய்சி சரண் ஆகிய இருவரும் ஆஜராகி இந்த சம்பவம் குறித்த விளக்கத்தை அளித்தனர். அவர்கள் இருவரும் நடந்தவற்றை எல்லாம் மறந்து சுமூகமாக சகோதர சகோதரிகளாக பயணிக்க விரும்புவதாக ஒழுங்கு குழுவினரிடமும் பின் பத்திரிக்கையாளர்களிடமும் தெரிவித்தனர். நடவடிக்கை நடந்தவை மறந்துவிட்டு சுமூகமாக செல்ல அவர்கள் விருப்பப்பட்டாலும் அந்த தொலைபேசி உரையாடல் சரி என்று நாமே ஒப்புக்கொள்வதை போல் ஆகிவிடும்.
நற்பண்புகளுடன் நூற்றுக்கணக்கான தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆதலால் ஒரு மாநில தலைவராக சில கடின முடிவுகளை எடுக்கவேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது ஆகவே, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஓ.பி.சி. அணி மாநில பொது செயலாளர் சூர்யா சிவா அவர்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் . செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதம் காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம்' என்று கூறியுள்ளார்.