அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு பணி
கிராம பஞ்சாயத்துக்களில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கணக்கெடுப்பு பணியினை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.
கிராம பஞ்சாயத்துக்களில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கணக்கெடுப்பு பணியினை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.
கணக்கெடுப்பு பணி
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் விருதுநகர் கூரைக்குண்டு பஞ்சாயத்தில் உள்ள செவல்பட்டி கிராமத்தில் கணக்கெடுப்பு பணியினை கலெக்டர் மேகநாநரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இத்திட்டத்தில் குடிசையில் வாழும் குடும்பங்கள் மட்டுமல்லாமல் நிலைத்த தன்மையற்ற, வாழ தகுதியற்ற வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்கள் கணக்கெடுக்கப்பட உள்ளது. தென்னங்கீற்று, பனை ஓலை, வைக்கோல் அல்லது இதர ஓலைகளைக் கொண்டு கூரைவேயப்பற்ற வீடுகள், தகரம் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ், மண் சுடப்படாத செங்கல்மண் கலவையுடன் கூடிய கருங்கல் சிமெண்ட் பலகை போன்ற நிலைத்த தன்மையற்ற சுவர்களை கொண்ட ஓட்டு வீடுகளும், சுவர் நல்ல நிலையில் இல்லாத வீடுகளும் கணக்கெடுக்கப்படும்.
5 பேர் குழு
வாடகைக்கு வசிக்கும் குடும்பங்கள், வனத்துறை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள குடும்பங்கள், ஊரகப்பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா பெற்று வீடு கட்ட இயலாத குடும்பங்களும் கணக்கெடுக்கப்பட உள்ளது.
பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் பிரதிநிதி ஆகிய 5 பேர் குழுவாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பட்டியல் கணக்கெடுப்பு பணியினை வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்கவும் கணக்கெடுப்பை ஆய்வு செய்யும் பணியினை ஜனவரி 9-ந் தேதிக்குள்ளாகவும், கணக்கெடுப்பு பட்டியலை இறுதி செய்யும் பணியை ஜனவரி 17-ந் தேதிக்குள்ளும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குடியரசு தினம்
உறுதி செய்யப்பட்ட புதிய கணக்கெடுப்பு பட்டியல் ஜனவரி 18-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இதுகுறித்த தீர்மானம் வருகிற குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் திட்ட இயக்குனர் திலகவதி, பஞ்சாயத்து தலைவர் செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.