பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி


தினத்தந்தி 20 May 2023 12:00 AM IST (Updated: 20 May 2023 12:00 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய வனச்சரக பகுதியில் 3-வது நாள் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய வனச்சரக பகுதியில் 3-வது நாள் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

யானைகள் கணக்கெடுக்கும் பணி

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் துணை கள இயக்குனர் பார்க்வே தேஜா ஆகியோரின் உத்தரவின் பேரில் உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில் வனத்துறையின் முன்களப் பணியாளர்களாகிய வனச்சரகர்கள், வானவர்கள், வனப் பாதுகாவலர்கள், வனக்காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 3 நாட்களாக யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் வனச்சரகர் மணிகண்டன், வால்பாறை வனச்சரக பகுதியில் வனச்சரகர் வெங்கடேஷ் ஆகிய 2 பேரும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் யானைகள் வழித்தடங்கள், யானைகள் வலசை போகும் பாதைகள் ஏற்கனவே யானைகள் நடமாட்டம் உள்ள வனப் பகுதிகள், வனப் பகுதியில் உள்ள நேர்கோட்டு பாதையில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கால் தடம் ஆய்வு

மானாம்பள்ளி வனச்சரகத்தில் சின்னக்கல்லார், நீரானது, மானாம்பள்ளி மற்றும் சேக்கல்முடி வனப் பகுதியில் காடம்பாறை, அட்டகட்டி, வாண்டல், கருமலை, அக்காமலை புல் மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள நீர் நிலை பகுதிகளை கொண்ட வனப் பகுதியில் 3-வது நாள் யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

கணக்கெடுப்பு பணியின் போது புதிதாக யானைகளின் சாணம் இடப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டு கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டது. ஒருசில நாட்கள் மற்றும் ஒரு வாரகாலத்தில் இடம்பெற்றிருந்த யானைகளின் சாணம், கால் தடம், மரக்கிளைகளை யானைகள் உடைத்து சேதப்படுத்தியிருந்த இடங்கள் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டது.

இந்த 3 நாட்கள் நடைபெற்ற யானைகள் கணக்கெடுப்பின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டது. கணக்கெடுப்பின் விபரங்கள் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது. காட்டு யானைகள் கூட்டம் கேரள வனப் பகுதிக்குள் இடம் பெயர்ந்து சென்று விட்ட நிலையில் கணக்கெடுப்பின் போது நேரடியாக யானைகளை பார்க்க முடியவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story