தண்ணீர் இன்றி கருகிய பயிர்களை கணக்கெடுக்கும் பணி
கோட்டூர் பகுதியில் தண்ணீர் இன்றி கருகிய பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
கோட்டூர்:
கோட்டூர் பகுதியில் தண்ணீர் இன்றி கருகிய பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
குறுவை சாகுபடி
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி ஒரு லட்சத்து 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் குறைந்த அளவு வந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் கருகியுள்ளன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
நிவாரணம்
இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தண்ணீர் இன்றி கருகிப்போன நெல் பயிர்கள் ஒரு எக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை முறையாக கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தண்ணீர் இல்லாமல் கருகிய நெல் பயிர்கள் குறித்து வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கணக்கெடுக்கும் பணி
அதன் அடிப்படையில் இருள்நீக்கி, நெருஞ்சினங்குடி, புழுதிக்குடி, களப்பால், சோழங்கநல்லூர், அக்கரை கோட்டகம், விக்கிரபாண்டியம் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கருகிய பயிர்களை கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர்.
மேலும் நிலத்தின் உரிமையாளரிடம் எவ்வளவு ஏக்கர் பயிரிட்டீர்கள்? எத்தனை நாள் பயிர்? எந்த ஆற்றின் மூலமாக பாசனம் பெறுகிறீர்கள்? என பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டு அதற்கான பதிலை குறித்துக்கொண்டனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.