கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
கொள்ளை சம்பவங்களை தடுக்க கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று வியாபாரிகளிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் வலியுறுத்தினார்.
ஆரணி
கொள்ளை சம்பவங்களை தடுக்க கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று வியாபாரிகளிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் வலியுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் நகை வியாபாரிகள், நகை அடகு வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பி.புகழ் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், ஷாபுதீன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சமீபத்தில் நகைக்கடைகளில் சுவற்றில் துளை போட்டு நகை கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கண்காணிப்பு கேமரா
இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வியாபாரிகள் கண்டிப்பாக கடைகளிலும், தங்கள் பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். கடைகளில் இரவு பாதுகாவலர்களை அமர்த்த வேண்டும்.
கடைக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பல லட்ச ரூபாய் செலவில் வீடு கட்டி நீங்கள் மட்டும் பாதுகாப்பாக வீட்டில் இருந்து விடுகிறீர்கள். தங்களது வாகனங்களை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு செல்கிறீர்கள். அதற்கு போதிய பாதுகாப்பில்லை.
எனவே, வாகனங்கள், பொருட்களை பாதுகாக்கும் வகையில் தங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். அப்படி இருந்தால் குற்றச் சம்பவங்கள் உடனடியாக கண்டுபிடிக்க உதவியாக இருக்கும்.
இதற்கு நீங்கள் கண்டிப்பாக உதவ வேண்டும் நீங்களும் உதவினால் தான் உடனடியாக குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நகை வியாபாரிகள், அடகு வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.