பிறவியிலேயே காது கேட்காத சிறுமிக்கு அறுவை சிகிச்சை


பிறவியிலேயே காது கேட்காத சிறுமிக்கு அறுவை சிகிச்சை
x

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக பிறவியிலேயே காது கேட்காத சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை பொட்டிசெட்டியபட்டியை சேர்ந்தவர் வள்ளிமலை. கூலித் தொழிலாளி. அவருடைய மகள் நிவேதா ஸ்ரீ (வயது 3). இந்த சிறுமிக்கு பிறவியிலேயே காது கேட்காத குறைபாடு இருந்து வந்தது. இதையடுத்து வள்ளிமலை தனது மகளை, திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வந்தார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதையொட்டி மருத்துவ கல்லூரி டீன் ராஜஸ்ரீ, கண்காணிப்பாளர் வீரமணி ஆகியோருக்கு சிறுமியின் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து டீன், கண்காணிப்பாளரின் ஆலோசனைப்படி, சென்னை காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் தலைமையில் அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் செந்தில்குமார், யோகானந்த், மயக்கவியல் டாக்டர்கள் வசந்த், கங்கா ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் நேற்று சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

இதுகுறித்து டாக்டர் செந்தில்குமார் கூறுகையில், பொதுவாக பிறவியிலேயே காது கேட்காத குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 3 முதல் 6 வயதுக்குள் அறுவை சிகிச்சை செய்தால் காது கேட்கும் சக்தியை திரும்ப கொண்டு வந்து விடலாம். அதன்படி சிறுமி நிவேதா ஸ்ரீக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை திண்டுக்கல் மாவட்டத்திலேயே அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான் முதல் முறையாக செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை முதல்வர் காப்பீடு திட்டத்தில் இலவசமாக செய்துள்ளோம் என்றார்.


Next Story