முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்


முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்
x

நெல்லையில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

திருநெல்வேலி

நெல்லையில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கந்த சஷ்டி விழா

நெல்லையில் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள், அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது.

சூரசம்ஹாரம்

நெல்லை சந்திப்பில் உள்ள பாளையஞ் சாலை குமாரசுவாமி கோவிலில் சூரசம்ஹாரத்தையொட்டி முருகப்பெருமானுக்கு பிற்பகலில் பால், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தநர்.

ரெயில் நிலையம், சிந்துபூந்துறை, செல்வி நகர், மேகலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

குறுக்குத்துறை

இதே போல் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாலையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

இதுதவிர மேலவாசல் முருகன் கோவில், நெல்லையப்பர் கோவில், பாளையங்கோட்டை சிவன் கோவில் முருகன் சன்னதியில் இருந்து சுவாமி எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் நீராடி பக்தர்கள் தங்கள் விரதத்தை முடித்துக் கொண்டனர்.

சிவந்தியப்பர் கோவில்

பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபநாச சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி இந்த கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு யாகம், அபிஷேகம், தீபாராதனை, சப்பரத்தில் வீதிஉலா வருதல் நடந்தது.

நேற்று மாலை சுவாமி பாபநாசத்தில் இருந்து புறப்பட்டு விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவிலுக்கு வந்தார். அங்கு இருந்து புறப்பட்டு ரதவீதியில் நான்கு புறத்திலும் நான்கு தலை, அதாவது கஜமுக சூரன், சிங்கமுக சூரன், தாரகா சூரன் மற்றும் மகா சூரன்களை முருகப்பெருமான் வதம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சிவந்தியப்பர் கோவிலை வந்தடைந்த முருக பெருமானுக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அம்பை

அம்பை காசிநாத சாமி கோவிலில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்று வீதி உலா நடந்தது. நேற்று மாலை 5 மணிக்கு மேல்அம்மையப்பர் கோவிலில் இருந்து சுவாமி எழுந்தருளி ரத வீதிகள் வழியாக அம்பை பஸ் ஸ்டாண்ட் அருகில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அம்பை அகஸ்தீஸ்வரர் கோவில், அம்பை அருகே உள்ள வாகைகுளம் சுப்பிரமணிய சுவாமி கோவில், மன்னார்கோவில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கல்லிடைக்குறிச்சி குமார கோவிலிலும் நிகழ்ச்சி நடந்தது.

முக்கூடல்

முக்கூடல் முத்துமாலை முருகன் திருச்சபை பாதயாத்திரை குழு சார்பாக சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதையொட்டி முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்துமாலை அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து முத்துமாலை முருகனுக்கு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

களக்காடு

களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி திருக்காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வந்தது. தினசரி மாலை முருகப்பெருமான் திருவீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நேற்று நடந்தது. இதையொட்டி முருகப்பெருமான் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார். கோவிலுக்கு வடபுறமுள்ள திடலுக்கு சென்றதும், அங்கு சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story