முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்
கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றதுத. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கூடலூர்,
கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றதுத. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கந்தசஷ்டி விழா
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது தலமான திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. கூடலூர் சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள முருகப்பெருமான் சன்னிதானத்தில் கந்தசஷ்டி விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து 9 மணிக்கு ஹோமங்களும், விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் முருகப்பெருமானுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணிக்கு அம்பிகையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முருகப்பெருமான் வதம் செய்தார்
பின்னர் கோவில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் முருகப்பெருமான் எழுந்தருளினார். தொடர்ந்து யானை, சிங்கம் என பல்வேறு உருவங்களில் எழுந்தருளிய சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷமிட்டனர். மேலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பாவனாபிஷேகம் செய்து முருகனை சாந்தப்படுத்தும் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். முன்னதாக சஷ்டியையொட்டி கூடலூர் குசுமகிரி, நந்தட்டி, திருக்கல்யாண மலை, சந்தன மலை, பொன்னூர், பந்தலூர், கொளப்பள்ளி பகுதிளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கோத்தகிரி
கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. நேற்று காலை 9 மணிக்கு முருகப்பெருமான் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து சுப்பிரமணிய சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், 10 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட தேரில் கோவிலை 3 முறை வலம் வந்து, சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
பின்னர் மதியம் 1.30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சக்தி சேவா சங்க தலைவர் போஜராஜன் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.