சத்தியமங்கலம் பாலமுருகன் கோவிலில் சூரசம்ஹார விழா
குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம் பாலமுருகன் கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சூரசம்ஹார விழா
குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவையொட்டி இக்கோவிலில் கடந்த 17-ந் தேதி முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. கடந்த 25-ந் தேதி முதல் சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு மாலை நேரங்களில் ரிஷப, மூஷிக வாகனம், பூ தேர் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து கடந்த 29-ந் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மூஷிக, ரிஷப, மயில் ஆகிய வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. அதுபோல அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று இரவு நடந்தது. இதையொட்டி உற்சவருக்கு சிறப்பு சஷ்டி அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சாமி தரிசனம்
பின்னர் ஆட்டு கிடா வாகனத்தில் சுவாமி எழுந்தருளி கஜமுகாசூரன், சிங்கமுகாசூரன், பானுகோபன், சூரபத்மன் ஆகிய 4 சூரன்களை வதம் செய்யும் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா சிறப்புடன் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வாணவேடிக்கை நடந்தது. இதில் இப்பகுதியைச் சுற்றியுள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சஷ்டி குழு, ஸ்ரீ பழனி பாதயாத்திரை குழு மற்றும் சத்தியமங்கலம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.