நினைவு ஸ்தூபிக்கு போலீஸ் சூப்பிரண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி
பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் நினைவு ஸ்தூபிக்கு போலீஸ் சூப்பிரண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நீத்தார் நினைவு நாள்
கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் உயிரிழந்தனர். கடற்கரையானாலும், பனி மலைச்சிகரமானாலும் இடர் நிறைந்த காவலர்களின் பணியில் இந்த ஆண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 189 போலீசார் இறந்துள்ளனர்.
பணியின் போது உயிரிழந்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் அக்டோபர் மாதம் 21-ந் தேதி நீத்தார் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் நீத்தார் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
குண்டுகள் முழங்க அஞ்சலி
இதையொட்டி புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமை தாங்கி மலர் வளையம் வைத்து, துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார். மேலும் போலீசார் வீர வணக்கம் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.